சென்னை: மக்களவைத் தேர்தல் 2024, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து என களம் காண்கிறது. அந்த வகையில், பெரும்பாலும் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் என நிறைவடைந்துள்ளது. இன்னும், காங்கிரஸ், தேமுதிக, அமமுக உள்ளிட்ட சில கட்சிகள் வேட்பாளர்கள் அறிவிப்பில் தொடர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
அதேநேரம், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் வைத்திலிங்கம் காங்கிரஸ் தரப்பில் போட்டியிடுவதாக இன்று வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலின் அடிப்படையில் தெரிகிறது. மேலும், திமுக மற்றும் அதிமுக தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். அதேபோல், பாஜக நேரடியாக போட்டியிடும் 19 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பாமக போட்டியிடும் 10 தொகுதிகளின் பெயர்கள் வெளியாகியுள்ளன.