சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் மரணத்தை தடுக்கத் தவறியதாக, தமிழக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் அடையாள கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதில் அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “அதிமுக இன்று மக்கள் பிரச்னைக்காக போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறது. அதிமுக நடத்திவரும் அனைத்து போராட்டங்களையும் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். சட்டப்பேரவையில் எவ்வாறு மக்கள் பிரச்சினை குறித்து குரல் கொடுக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
ஆனால், அவர்களை பேசவிடாமல் திமுக அரசு புறக்கணிக்கிறது. இதனை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 63 மரணங்கள் நிகழ்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்னைகளைப் பேசுவதற்கு தான், அங்கு மக்கள் பிரச்சினையைப் பேசவிடாமல் தடுப்பது ஜனநாயக விரோதம்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சிகளை பேச விட வேண்டும் என்று ராகுல் காந்தி கூறுகிறார். அதற்கு திமுக எம்பிக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல் இருப்பது சரியா? நாடாளுமன்றத்திற்கு ஒரு நீதி? சட்டப்பேரவைக்கு ஒரு நீதியா?” என கேள்வி எழுப்பினார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “அவையை நடத்த விடாமல் தொடர்ந்து அதிமுகவினர் விளம்பரத்திற்காக இதுபோன்று செய்வதாக நேற்றைக்கு முதலமைச்சர் கூறுகிறார். ஆனால், கடந்த காலங்களில் திமுகவினர் தான் அதிக அளவு சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். சட்டப்பேரவை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டையை கிழித்துக்கொண்டு வந்து விளம்பர தேடினாரே, அதுதான்.
கிழியாத சட்டையை கிழிஞ்ச சட்டையாக பத்திரிகை முன்பு காட்டியது தான் விளம்பரம். கடந்த சபாநாயகர் இருக்கையில் அமளியில் ஈடுபட்டு திமுகவினர் அமர்ந்தது தான் சட்டமன்ற விதிமீறல். நாளை தேமுதிக சார்பில் ஆளுநரைச் சந்திக்க இருப்பதாக” கூறினார்.