தருமபுரியில் தேர்தல் பிரச்சாரம் செய்த பிரேமலதா விஜயகாந்த் தருமபுரி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் அசோகனை ஆதரித்து, அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் நேற்றிரவு (சனிக்கிழமை) திறந்தவெளி வாகனத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது மக்களிடம் பேசிய அவர், "விவசாயிகளில் நெற்பயிர்களை சேமிக்க கிடங்கு இல்லாமல் மழை வரும்போது நனைகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய கிடங்கு அமைத்தல், தருமபுரி - மொரப்பூர் ரயில்பாதை திட்டம், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டுவர டெல்லியில் குரல் எழுப்ப அசோகனுக்கு வாக்களியுங்கள்.
அதிமுக சார்பில் போட்டியிட்டும் வேட்பாளர் அசோகன் இந்த மண்ணின் மைந்தர், மற்ற கட்சிகள் யாரை வேட்பாளராக அறிவித்துள்ளனர் என்பது உங்களுக்கு தெரியும். மேலும், இந்த கூட்டணி மக்கள் விரும்பிய கூட்டணி. இந்த கூட்டணி புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி மற்றும் புரட்சிக் கலைஞர் ஆகிய மூன்று தெய்வங்களின் ஆசீர்வாதம் பெற்ற கூட்டணி.
இதையும் படிங்க:சாதிவாரி கணக்கெடுப்பு; ராமதாஸின் விளக்கத்திற்கு மீண்டும் கேள்வி எழுப்பிய ஸ்டாலின்!
இந்த கூட்டணி சாதி, மதம், இனங்களுக்கு அப்பாற்பட்டது. எம்ஜிஆர் சத்துணவு திட்டம் கொண்டு வந்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா உணவகம் கொண்டுவந்தார். அதேபோல, கேப்டன் பெயரில் வாழ்நாள் முழுவதும் கேப்டன் நினைவிடத்தில் உணவு அளிக்கப்படும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், கேப்டனின் ஆசையை நிறைவேற்றியே தீருவோம்.
திமுக அறிவித்த எந்த திட்டமாவது நிறைவேறியுள்ளதா? நீட் தேர்வு, விலைவாசி, மின்கட்டணம், நகை கடன், விவசாயக் கடன் அனைவருக்கும் வேலைவாய்பபை தந்தார்களா? இப்படி எதுவும் இல்லை. ஆனால், தெருவுக்கு ஒரு டாஸ்மாக் கடை, லாட்டரி, பாலியல் வன்கொடுமை, கஞ்சா நடமாட்டம் உள்ளிட்டவை தலைவிரித்தாடுகின்றன.
இவையெல்லாம் தடுப்பது வாக்களிப்பதில் தான் உள்ளது. நீங்கள் அளிக்கும் ஒற்றை ஒட்டில்தான் மாற்ற முடியும். உங்கள் குரலாக அவரை வெற்றி பெற வைத்து டெல்லியில் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும். ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம். தேர்தலில் அனைவரும் கட்டாயம் ஓட்டுப் போட வேண்டும். 40 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்யுங்கள்" எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:"கர்நாடகாவில் காங்கிரஸ் - தமிழ்நாட்டில் திமுக இருக்கும் வரை காவிரி பிரச்னை தீர வாய்ப்பில்லை”- அண்ணாமலை தாக்கு!