புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் வந்தார். புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையை வழங்கினார்.
தேமுதிக எல்.கே.சுதீஷ் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எல்.கே.சுதீஷ் கூறுகையில், “தேமுதிக கட்சி தொடங்கி 20வது ஆண்டுக்குள் இன்று அடி அடித்து வைக்கிறோம். இதன் சார்பாக இன்று அனைத்து மாவட்டங்களிலும் தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. தேமுதிக இன்றைக்கும் அதிமுகவோடு தான் பயணிக்கிறது.
வருகின்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவோடு தான் பயணிப்போம். 2026ஆம் ஆண்டில் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, போதை கலாச்சாரம், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கள்ளச்சாராயம் ஆகியவை சரளமாக நடக்கிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. தெலங்கானா முதல்வர் ஏழு நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்று 37,000 கோடி அளவிற்கு முதலீடு கொண்டு வந்துள்ளார்.
ஆனால், தமிழக முதல்வர் 18 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் செய்தும் 7,500 கோடி தான் முதலீடு பெற்று வந்துள்ளார். அதற்கு அவர் வெளிநாட்டிற்குச் செல்ல தேவையே இல்லை. இதில் பல நிறுவனங்கள் தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருப்பது தான், தொடர்பு கொண்டு பேசி இருந்திருக்கலாம், இல்லை அவர்களை இங்கு வரவழைத்து பேசி இருக்கலாம்.
இதையும் படிங்க:பன் + க்ரீம் வீடியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்னபூர்ணா நிர்வாகம்!
போர்டு நிறுவனம் தமிழகத்தில் ஏற்கனவே உள்ளதுதான். அதை இங்கிருந்து துரத்தி விட்டது திமுக தான். கோவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்து அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் கூறியுள்ளது முற்றிலும் சரிதான். அவர் நகைச்சுவையாக பேசியதை சீரியஸாக சிலர் எடுத்துக் கொண்டு விட்டனர்.
மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது, இது போன்ற கூட்டம் நடத்தினால் தொழிலதிபர்கள் கூறிய கருத்துக்களை உடனடியாக நிறைவேற்றினார். இந்தச் சம்பவத்தை அமைச்சர் எளிதாக எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், இதை வீடியோவாக வெளியிட்டு அரசியல் ஆக்கிவிட்டார்கள். நடிகர் விஜய், விஜயகாந்துக்கு உரிய மரியாதையை அவ்வப்போது கொடுத்துக் கொண்டு இருந்தார். விஜயகாந்த் மீது விஜய்க்கு எப்போதுமே மிகுந்த மரியாதை உண்டு” என்றார்.
மேலும் 2026ஆம் ஆண்டு தமிழகத் தேர்தல் களத்தில் விஜய் சவாலாக இருப்பாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த சுதீஷ், “முதலில் அவர் மாநாடு நடத்தட்டும், கொள்கைகளை அறிவிக்கட்டும், அதன் பிறகு பார்க்கலாம். 2026 தேர்தலுக்கு இன்னும் நிறைய நேரம் உள்ளது. மக்கள் விஜயை எப்படி வரவேற்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக மிகக் கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் ”என்றார்.