திருநெல்வேலி:திருநெல்வேலி என்றாலே அனைவரது நினைவுக்கு வருவது அல்வா தான். இங்கு அல்வா எவ்வளவு பேமஸோ, பாட்டியின் கைப்பக்குவத்தில் உருவான கை சுத்து முறுக்கும் பேமஸ் தான். பொதுவாகவே திருநெல்வேலியில் கை முறுக்கு, முந்திரி கொத்து, நெய் உருண்டை, அதிரசம், மிக்சர், காரச்சேவு போன்ற பாரம்பரிய பலகாரங்கள் புகழ்பெற்றதாக உள்ளது.
கை சுத்து முறுக்கு: தீபாவளி பண்டிகை என்றால் இவை அனைத்தும் வீட்டிலேயே தயார் செய்வர். அதில் கை சுத்து முறுக்கும், முந்திரி கொத்தும் திருநெல்வேலியில் ரொம்ப விஷேசம். நாகர்கோவிலுக்கு அடுத்தபடியாக திருநெல்வேலியில் மட்டும் தான் முந்திரி கொத்து கிடைக்கும். சிறு பயிரை அரைத்து அதில் இனிப்புக்கு வெல்லம் சேர்த்து உருண்டையாக்கி, எண்ணெயில் போட்டு எடுத்தால் முந்திரி கொத்து தயாராகி விடும். அதேபோல் முறுக்கு சுடுவதில் திருநெல்வேலி பெண்களுக்கு என்று தனி கைமணம் உண்டு.
பச்சை அரிசி மற்றும் புழுங்கல் அரிசியை ஊற வைத்து அரைத்து மாவாக்கி அதில் நெய், எள், உப்பு சேர்த்து கையில் பிசைந்து, பின்னர் கையால் ஸ்பிரிங் போல ஒரு தட்டில் சுற்றி வைப்பார்கள். அதை எண்ணெயில் போட்டு எடுத்தால் சுட சுட மொறு மொறு கை சுத்து முறுக்கு தயாராகி விடும். முன்பை போல இப்போது யாரும் பெரிதாக வீடுகளில் சுடுவதில்லை. பலரும் கடைகளை நாடுகின்றனர்.
பலகாரங்கள் செய்யும் பணியும் மும்முரம்: தற்போது தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு கடைகளில் பலகாரங்கள் சுடுவதற்கான பணியை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் உள்ள பிரபலமான கை சுத்து முறுக்கு சிறு தொழில் கடையில் விற்பனை சூடு பிடித்துள்ளது. இங்கு புழுங்கல் அரிசி கை சுத்து முறுக்கு மட்டுமின்றி முந்திரி கொத்து, தட்டை, அதிரசம், பொரிவிளங்காய் உள்ளிட்ட பலகாரங்கள் செய்யும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
முறுக்கு (Credits - ETV Bharat Tamil Nadu) இங்கு தயார் செய்யப்படும் கை சுத்து முறுக்கு, தமிழகம் மட்டுமல்லாமல் டெல்லி, மும்பை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், லண்டன் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. அந்நாடுகளில் இருக்கும் தமிழக மக்கள் திருநெல்வேலி கை சுத்து முறுக்கின் ருசியை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
குழந்தைகளும் விரும்புவர்: இது குறித்து கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் முறுக்கு கடை நடத்தி வரும் பாளையங்கோட்டை முறுக்கு கடை உரிமையாளர் ராமசுப்பிரமணியன் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "சாப்பாட்டிற்கு திருநெல்வேலி பேமஸ். அதே போல்கை சுத்து முறுக்கும் இங்கு பேமஸ். தொடர்ந்து பெய்த மழை, ஆள் பற்றாக்குறை ஆகிய காரணங்களால் வெளியில் இருந்து ஆர்டர் எடுக்கவில்லை. தற்போது தீபாவளி நெருங்கும் நிலையில் கடையில் விற்பனை அதிகரித்துள்ளது.
கை முறுக்கு தயார் செய்யும் பணி (Credits - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:பருத்தி நூல் முதல் பட்டு வரை.. தீபாவளி விற்பனையில் களைகட்டும் கைத்தறி சேலைகள்!
எங்களுடைய கடையில் பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி, நெய் கொண்டு கை சுத்து முறுக்கு பக்குவமாக செய்யப்படுகிறது. இந்த முறுக்கு குழந்தைகள் சாப்பிட்டு பார்த்தால் திரும்பவும் கேட்பார்கள். அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு துரித உணவுகளையும், பாக்கெட் உணவுகளையும் வாங்கிக் கொடுப்பதை தவிர்த்து பாரம்பரிய பண்டங்களான முறுக்கு, அதிரசம், முந்திரி கொத்து, தட்டை உள்ளிட்ட பண்டங்களை வாங்கி கொடுத்து பழக்க வேண்டும்.
முறுக்கு தயார் செய்யும் பெண் (Credits - ETV Bharat Tamil Nadu) விலைவாசி உயர்வால் பாதிப்பு: இதனால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள். திருநெல்வேலி என்றால் பாரம்பரிய பண்டங்கள் பேமஸ். எங்களிடம் தயார் செய்யும் கை சுத்து முறுக்கு இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளுக்கும் செல்கிறது. தற்போது மூலப் பொருட்களான அரிசி மூட்டை 900 ரூபாயில் இருந்து தற்போது ஆயிரத்து 300 ரூபாயாக விலை அதிகரித்துவிட்டது. அதேபோல் எண்ணெய் விலையும் 35 சதவீதம் அதிகரித்துவிட்டது. இதனால் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு எங்களால் முடிந்த அளவு விலையை நிர்ணயித்து வியாபாரம் செய்து வருகிறோம்” என்றார்.
கை சுத்து முறுக்கே சுவை: வாடிக்கையாளர் உமா மகேஸ்வரி கூறுகையில், “எங்கள் வீட்டு விஷேச நிகழ்ச்சிகளுக்கு எப்பவும் இங்கு தான் முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட பலகாரங்கள் வாங்குவேன். இப்போது தீபாவளிக்காக பலகாரங்கள் வாங்க வந்துள்ளேன். மற்ற பலகாரங்களை விட கை சுத்து முறுக்கு மிகவும் சுவையாகவும், மணமாகவும் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்” என்று கூறினார்.
ஆரோக்கியம் மிகுந்தது:முறுக்கு சுடும் பெண் ஜெயப்பிரபா கூறுகையில், “மற்ற கடைகளை விட இந்த கடை கை சுத்து முறுக்கு ஸ்பெஷல். மற்ற கடைகளில் பச்சரிசி மாவும், வனஸ்பதியும் பயம்படுத்துவார்கள். பச்சரிசியை பலரும் விரும்ப மாட்டர். சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். ஆனால் இங்கு புழுங்கல் அரிசியும், நெய்யும் பயன்படுத்துகிறோம். அதில் சேர்க்கப்படும் உளுந்து, சீரகம், எள்ளு உடலுக்கு மிகவும் நல்லது. அதனால் குழந்தைகளுக்கு கூட பயமில்லாமல் சாப்பிட கொடுக்கலாம். பயறு, தேங்காய் சேர்த்து தயாரிக்கப்படும் முந்திரி கொத்தும் உடலுக்கு நல்லது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
வரும் தலைமுறையும் பின்பற்ற வேண்டும்:முறுக்கு, அதிரசம், முந்திரி கொத்து உள்ளிட்ட நமது பாரம்பரிய உணவுகளை இப்போது மறந்துவிட்டார்கள். பதப்படுத்தி பாக்கெட்டில் அடைத்த உணவு பண்டங்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இங்கு செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்த மாட்டோம். கை சுத்து முறுக்கு எல்லாராலும் தயார் செய்ய முடியாது. பழகிய பின் தான் சுட முடியும். இந்த கை சுத்து முறுக்கு சுடுவது என்னுடைய தலைமுறையுடன் முடியாமல், அடுத்து வரும் தலைமுறையும் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்