சென்னை:பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், ஆசிரியர்கள் சிலர் தங்களின் சுயநலத்திற்காக குறைவாக மாணவர்கள் இருந்தாலும் அதிக எண்ணிக்கையில் காண்பித்து பணிபுரிந்து வருகின்றனர்.
அமைச்சர் அறிவிப்பு: தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிலும் தொகுதிவாரியாக அனைத்து பள்ளிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.
கல்வி அலுவலர்கள் ஆய்வு:அதன் தொடர்ச்சியாக தற்போது தொகுதிவாரியாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி, தொடக்க, நடுநிலை பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கல்வி கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை, ஆய்வு அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர்.
4 பேர் சஸ்பெண்ட்:தொடக்கக் கல்வித் துறை பள்ளிகளில் மேற்கொண்ட ஆய்வில் மாணவர்கள் இல்லாத பள்ளிகளிலும் ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்ட தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்ததை அடுத்து, வட்டார கல்வி அலுவலர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையும் சஸ்பெண்ட் செய்து தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.