திருநெல்வேலி:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் படி, மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொறுத்தவரையில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதனையடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மாவட்டம்தோறும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளன. அந்தவகையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டுக்கு வந்தது.
தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் 18004258573 மற்றும் 1950 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் மூலம் தங்களது புகார்களைக் கூறலாம். பொதுமக்கள் புகார்களைத் தெரிவிக்க தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி உட்பட 6 சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளது.