சென்னை:வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தின் நடுவே தொழிலாளர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதைத் தடுக்கும் பொருட்டு திறந்தவெளியில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கம், வெப்ப அலை உள்ளிட்டவைகளின் காரணமாக பொதுமக்கள் அன்றாடம் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனிடையே, சுட்டெரிக்கும் கத்திரி வெயிலின் கடுமையான வெப்பத்தை தாங்க முடியாமல் சிறுவர் சிறுமியர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர் தங்களது வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர்.
இதனிடையே, சென்னை மற்றும் மதுரையில் மே மாதத்தின் இறுதிவரை ஒவ்வொரு நாள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பேரிடர் மேலாண்மை வெப்ப காலநிலைக்கான பருவகாலக் கண்ணோட்டம் – வெப்ப அலைத் தயார்நிலை மேலாண்மை மற்றும் தணிப்புக்கான நடவடிக்கைகள் வழங்கப்பட்ட வழிமுறைகள் தொடர்பாக, பார்வை 2-ல் காணும் குறிப்பாணை மூலம் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் தொடர்ச்சியாக, தற்பொழுது நிலவி வரும் அதிக வெப்ப அலை காரணமாக தொழிலாளர்களின் உடல்நலம் பாதிப்படைவதை தடுக்கும் பொருட்டு, திறந்த வெளியில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமான பணிகளும் காலை 10 முதல் மாலை 4 வரை மேற்கொள்ளக்கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்துமாறு சென்னை மற்றும் மதுரை அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்நடைமுறை மே மாதம் 2024 இறுதி வரை கடைபிடிக்கப்படவேண்டும்.
இணை இயக்குநர்கள்(BOCW) மேற்கூறிய அறிவுரைகள் கட்டுமான நிறுவனங்களால் பின்பற்றப்படுவதை இணை இயக்குநர்கள் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கோள்ளப்படுகிறார்கள்.
வெப்பத்தின் காரணமாக தொழிலாளர்களின் உடல் நிலை பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலக பாதுகாப்பு இயக்கம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல் முறையாக பின்பற்றபடுகிறாதா? என்பதை சென்னை, மதுரையின் இணை இயக்குனர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் எனத் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நெல்லையிலும் போக்குவரத்து சிக்னலில் பசுமைப் பந்தல்! - Green Pandal In Nellai Signals