தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேதுபதி மன்னர் கட்டிய கோயிலில் பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு..! - Discovery Of Pandyan Inscription

ராமநாதபுரம் மாவட்டத்தில் சேதுபதி மன்னரால் கட்டப்பட்ட ரெணபலி முருகன் கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

பெருவயல் ரெணபலி முருகன் கோயில்
பெருவயல் ரெணபலி முருகன் கோயில் (Credits - ETV Bharat Tamil Nadu)

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே உள்ள பெருவயல் என்ற பகுதியில் அமைந்துள்ள ரெணபலி முருகன் கோயில் தூணில் ஐந்து வரிகள் கொண்ட பாண்டியர் கால துண்டுக் கல்வெட்டு இருந்ததை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கண்டுபிடித்து படித்து ஆய்வு செய்துள்ளார்.

இதுபற்றி வே.ராஜகுரு கூறியதாவது, "இக்கோயில் கட்டயத்தேவர் என்ற குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி காலத்தில் (கி.பி.1728-1735) அவருடைய பிரதானி வைரவன் சேர்வைக்காரரால் கட்டப்பட்டது. கி.பி.1736-இல் குமாரமுத்து சேதுபதி பெருவயல் கலையனூர் கிராமத்தை கோயிலுக்கு தானமாகக் கொடுத்த கல்வெட்டு இங்கு உள்ளது.

புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு, கோயில் திருச்சுற்று வடமேற்கு மூலையில் உள்ள தூண் போதிகையில் உள்ளது. இதில் '(சந்தி) விக்கிரகப் பேறும் மற்றும் எப்பேர்பட்டின(வும்), ரன்னொம் கைக்கொண்டு திருப்படி மாற்றுள்(ளிட்டு), செம்பிலும் வெட்டிக் கொள்க, இவை மதுரோதய வளநாட்டுக் காஞை(இருக்கை), பெருமணலூர் மந்திரி இராமனான (பல்லவராயன்)' என உள்ளது.

கல்வெட்டில் சொல்லப்படும் பெருமணலூர் மந்திரி இராமனான பல்லவராயன் என்பவர், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தை சேர்ந்த ஒரு அரசு அதிகாரியாவார். விருதுநகர் மாவட்டம், நரிக்குடி, திருத்தங்கல், ஈஞ்சார் கோயில் கல்வெட்டுகளில் இவர் பெயர் குறிப்பிடப்படுகிறது.

இக்கல்வெட்டு 800 ஆண்டுகள் பழமையான முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி1216-1244) காலத்தைச் சேர்ந்ததாகும். பாண்டியர் காலத்தில் இருந்த கோயிலுக்கு தானம் வழங்கப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இதில் சந்தி விக்கிரகப்பேறு என்ற வரியும், மதுரோதய வளநாட்டுக் காஞை இருக்கை என்ற நாட்டுப்பிரிவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கல்வெட்டுகளை எப்படி படியெடுக்கனும்? - தொல்லியல் ஆய்வாளர் கூறும் வழிமுறைகள்!

தூணின் மேற்பகுதியை உத்திரத்துடன் இணைக்கும் விரிந்த கை போன்ற அமைப்பை போதிகை என்பர். பாண்டியர், நாயக்கர், சேதுபதி மன்னர் காலங்களில் கட்டப்பட்ட கோயில் தூண்களில் வெவ்வேறு வகையான போதிகைகளை அமைத்து அழகுபடுத்துவர்.

கல்வெட்டு உள்ள வெட்டுப் போதிகை எனும் அமைப்பு பாண்டியர் காலத்தை சேர்ந்ததாகும். பாண்டியர் கால வெட்டுப் போதிகைகளை சேதுபதிகால கருங்கல் தூண்களுடன் இணைத்து இக்கோயில் பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. வெட்டுப் போதிகை கற்கள் இவ்வூரில் இருந்து அழிந்து போன ஒரு பாண்டியர் கால சிவன் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்டவையாக இருக்கலாம்" என்று விவரித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details