மயிலாடுதுறை:மாற்றுத்திறனாளி குழந்தைகளாலும் சாதிக்க முடியும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், சென்னை செனாய் நகரில் உள்ள எஸ்டிஏடி உடன் இணைந்து வேவ் ரைடர்ஸ் விளையாட்டுக் குழு ராமேஸ்வரம் முதல் சென்னை மெரினா வரை 604 கி.மீ தொடர் நீச்சல் பயணத்தை நடத்துகிறது. ராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு 604 கி.மீ., கடல் வழியாக 15 மாற்றுத்திறன் மாணவர்கள் கடலில் நீச்சல் பயணம் செல்கின்றனர்.
உலக சாதனை முயற்சியாக நடத்தும் இந்த பயணத்தில் மாற்றுத்திறன் மாணவர்கள் ராமேஸ்வரம் முதல் சென்னை மெரினா கடற்கரை வரை 604 கி.மீட்டர் தொடர் நீச்சல் பயணம் மேற்கொள்கின்றனர். ராமேஸ்வரத்தில் கடந்த 5ஆம் தேதி கடற்பயணத்தை தொடங்கிய இவர்கள், நாளொன்றுக்கு 50 கிமீ வரை என 12 மணி நேரம் பயணிக்கின்றனர்.
தொண்டி, காட்டுமாவடி, வேளாங்கண்ணி, தரங்கம்பாடி, பழையாறு, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, மரக்காணம், மகாபலிபுரம், ஈஞ்சம்பாக்கம் வழியாக 10 நாள் முடிவில் இவர்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை பகுதியில் தங்கள் சாதனையை நிறைவு செய்ய உள்ளனர். இந்த நிலையில், நேற்று மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை வந்தடைந்தனர்.
அங்கிருந்து இன்று காலை கடல்வழியாக பழையாறு நோக்கி புறப்பட்டனர். இந்த நீச்சல் பயணத்தில் 11 வயது மாணவர் சித்தார்த் மற்றும் முற்றிலும் பார்வைத்திறன் அற்ற மாணவர் லக்ஷய்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இந்த சாதனை வேர்ல்டு ரெக்கார்ட் யூனியனில் பதிவு செய்யப்படவுள்ளது. நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படவிருக்கும் ஆகஸ்ட் 15 அன்று, 15 குழந்தைகள் இணைந்து மாபெரும் உலக சாதனை புரிய இருக்கிறார்கள்.