சென்னை:பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், தலித் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக பேரணி நடத்தப்பட்டது.
இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு (Credits - ETV Bharat Tamil Nadu) இந்த பேரணி எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே தொடங்கி மவுண்ட் ரோடு வழியாகச் சென்று எழும்பூர் இராஜ ரத்தினம் அரங்கத்தின் அருகே நிறைவு பெற்றது. பேரணியில் கலந்து கொண்ட இளைஞர்கள் பலர் 'MARCH FOR JUSTICE' என்ற வாசகத்துடன் கருப்பு டி.சட்டைகளை அணிந்து இருந்தனர்.
மேலும் உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங் முகமூடி அணிந்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த பேரணியில் இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் மன்சூர் அலிகான், அட்டக்கத்தி தினேஷ், திருமுருகன் காந்தி, பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் கூட்டத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் மேடையில் பேசியதாவது, "திமுக மீது குற்றம் சுமத்துவதற்காக இந்த பேரணி நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் எழுதுகின்றனர். அரசு அதிகாரிகள், காவல்துறையினர், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்.
அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை நீங்கள் ரவுடி என்று சொல்வீர்களா? அப்படிச் சொன்னால் நாங்கள் ரவுடிகள் தான். இந்த படுகொலையை எளிதாக கடந்து விடலாம் என நீங்கள் நினைக்காதீர்கள், இது ஒரு எச்சரிக்கை.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை நாங்கள் ஓயமாட்டோம். காவல்துறை விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இழந்தால் எங்களுடைய முடிவுகள் மாறும். ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு சூழ்ச்சிகள் உள்ளன.
சென்னையை பொறுத்தவரை எங்களை மீறி நீங்கள் எதுவும் செய்ய முடியாது. சென்னையில் மட்டும் 40 சதவீத தலித் மக்கள் உள்ளார்கள். நாங்கள் அரசியலற்று இருக்கலாம். ஆனால் அரசியல்வுடையவர்களாக மாறும்போது நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கும் நிலை வரும்.
பிரியா ராஜன், மேயர் பதிவிக்கும், கயல்விழி செல்வராஜ் அமைச்சர் பதவிக்கும் எப்படி வந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பிரியா திமுகவில் இருப்பதால் அவர் மேயர் இல்லை. ரிசர்வேஷன் இருந்ததால் தான் பிரியா மேயராகவும், கயல்விழி செல்வராஜ் அமைச்சராக அமர முடிந்தது.
ஆனால் இவர்கள் இருவரும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்குக் குரல் கொடுக்கவில்லை. அவர்கள்திமுகவில் இருப்பதால்தான் குரல் கொடுக்கவில்லையா?" என்று பா.ரஞ்சித் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், "திருமாவளவனுக்கு எதிராக நான் ஒருபோதும் இருக்கமாட்டேன். நாங்கள் எப்போதும் அவருடன்தான் இருப்போம்.
பட்டியலின மக்களுக்கான உரிமை குறித்துப் பேசினால் 'பி டீம்' என்று சொல்கின்றனர். பாஜகவுக்கு நேர் எதிரானவர்கள் நாங்கள். தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. நான் திமுகவிற்கு எதிராகப் பேசவில்லை. அனைத்துக் கட்சிக்கு எதிராகப் பேசுகிறேன்.
அனைத்து கட்சிகளும் எங்களை ஏமாற்றுகிறார்கள். சமூக நீதியைப் பின்பற்றும் திமுகவிற்கு ஒரு வேண்டுகோள். சென்னையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு மணி மண்டபம் கட்ட அரசு அனுமதிக்க வேண்டும். மற்ற ஜாதி பிரச்சினைகளும், தலித் மக்களின் பிரச்சனையும் வேறு;
இரண்டையும் ஒன்றாக அணுகாதீர்கள். ஆம்ஸ்ட்ராங்குக்குப் பிறகு தலித் மக்களின் கோரிக்கைகளையும், பிரச்சனைகளையும் நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுக்கும்" என்று பா.ரஞ்சித் பேசினார்.
இதையும் படிங்க:ஆற்றில் வீசப்பட்ட போன்.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கம்!