சென்னை:ஒவ்வொரு ஆண்டும் சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்களுக்கு சராசரியாக 90 சதவீதம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது என்றும், ஐஐடியிலிருந்து வெளியில் சென்று 6 மாதத்திற்கு மேல் வேலையில்லாமல் எவரும் இருந்ததில்லை என்றும் ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த ஆண்டு 83 விழுக்காடு மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளது. மற்ற மாணவர்கள் உயர்கல்விக்காகவும், சுயதொழில் காரணமாகவும் வேலை வாய்ப்புகளைப் பெற முன் வருவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 90 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
பிஇ (BE), பிடெக் (B.Tech) படிப்பினை முடித்து விட்டு, வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலைக்குச் செல்கின்றனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. 90 சதவீதம் மாணவர்கள் வேலைக்குச் சென்று விடுகின்றனர். 10 சதவீதம் மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்கின்றனர். ஆராய்ச்சி படிப்புகளில் ஈடுப்படும் மாணவர்கள் வேலைக்குச் செல்வது குறித்து அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.