சென்னை:டெல்லியில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கடத்தப்பட்ட வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCB) அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், நடிகரும், இயக்குநருமான அமீர் விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். இந்நிலையில், இந்த விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக எப்போதும் இருக்கிறேன் என இயக்குநர் அமீர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விசாரணையை நான் எதிர்கொள்ளத் தயாராகத்தான் எப்போதும் இருக்கிறேன். கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் என் தரப்பில் உள்ள நியாயத்தையும் உண்மையையும் எடுத்துச் சொல்வேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், இறைவன் அருளால், 100 சதவீதம் வெற்றியோடு வருவேன்.
அந்த நம்பிக்கையுடன் எப்போதும் இருக்கிறேன். இறைவன் மிகப்பெரியவன் என்று இயக்குநர் அமீர் வாட்ஸ் அப் காலில் தெரிவித்துள்ளார். ஜாபர் சாதிக் தயாரிப்பில் இறைவன் மிகப் பெரியவன் என்ற திரைப்படத்தை இயக்குநர் அமீர் இயக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இந்த போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த போதைப் பொருள் கடத்தல் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருப்பதும் அதன் மூலம் திரைப்படங்கள் தயாரிப்பு பல்வேறு தொழில்களில் முதலீடு செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த வருவாயை, வேறு யாருக்கெல்லாம் கொடுத்துள்ளார் என்பது குறித்துத் தொடர்ந்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் ஜாபர் சாதிக் உடன் திரைப்படத் தயாரிப்பில் தொடர்பில் இருந்தவர்கள், தொழிலில் தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்டவர்களை விசாரிக்கத் திட்டமிட்டனர். அதன்படி, நடிகரும், இயக்குநருமான அமீரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். அந்த சம்மனில் வரும் இரண்டாம் தேதி செவ்வாய்க்கிழமை டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளது.
இதையும் படிங்க: “ED, IT மோடியில் ஏவல் நாய்களாக செயல்படுகிறது” - சிபிஐ தேர்தல் அறிக்கை வெளியிட்டபின் முத்தரசன் காட்டமான பேச்சு! - CPI Mutharasan