திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கடந்த சனிக்கிழமை பேருந்து நிலையப் பகுதியில் இர்பான் என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தலை சிதைத்து கொலை செய்தது. இந்தக் கொலை தொடர்பாக நான்கு பேரை திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் கைது செய்தனர். மேலும், இரண்டு பேர் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இந்த நிலையில், இர்பான் கொலைக்குப் பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளை பதுக்கி வைத்திருந்த இடத்தில் இருந்து கைப்பற்றுவதற்காக, கொலை வழக்கில் தொடர்புடைய ரிச்சர்ட் சச்சின் என்பவரை மாலைப்பட்டி பகுதியில் உள்ள முள் காட்டுப் பகுதிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
அப்போது, ஆயுதங்களை எடுத்துக் கொடுக்கும்போது, ரிச்சர்ட் சச்சின் பதிக்கி வைத்திருந்த அறிவாளால் காவலர்களைத் தாக்கத் தொடங்கினார். இதில் அருண் என்ற காவலருக்கு கையில் வெட்டுப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி திண்டுக்கல் நகர் வடக்கு ஆய்வாளர் வெங்கடாஜலபதி ரிச்சர்ட் சச்சினை வலது காலில் சுட்டார்.
இதனையடுத்து, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சச்சின் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், வெட்டுக்காயம் ஏற்பட்ட அருள் என்ற காவலரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக, திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட எஸ்பி பிரதீப், ஏடிஎஸ்பி சுபி ஆகியோர் காயம் ஏற்பட்ட காவலரை நேரில் பார்த்து ஆறுதல் கூறினர். திண்டுக்கல் பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடைய ஒரு நபர் சுடப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.