திண்டுக்கல்:பழனியில் கி.பி.19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஓர் ஆவணம் கண்டறியப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறுகையில், “பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் வி.மீனா. இவர் பாதுகாத்து வைத்திருந்த பழங்கால ஆவணம் ஒன்றை என்னிடம் கொடுத்து, அதைப் படித்து விளக்கம் அளிக்குமாறு வேண்டினார்.
கணியர் ஞானசேகரன் உதவியோடு அதை ஆய்வு செய்த போது, அந்த ஆவணம் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் முத்திரைத் தாள் என்பதும், அதை பாலசமுத்திரம் ஜமீன்தாரினி சின்னோபளம்மா எழுதி இருப்பதும் தெரிய வந்தது. இந்த முத்திரைத்தாள் 10.5 × 16.5 செ.மீ அளவில் உள்ளது.
இந்த ஆவணம் பாலசமுத்திரம் ஜமீன்தாரினி சின்னோபளம்மா சொற்படி எழுதப்பட்டு, இறுதியில் அவருடைய கையொப்பம் இடப்பட்டுள்ளது. ஆவணம் மொத்தம் 31 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. தனது ஜமீன் பண்ணையின் 23 ஏஜெண்டுகள் பெயர்களை எழுதி, அதை மேனேஜர்கள் விவரப் பத்திரம் என்று பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் முத்திரைத்தாளில் பதிந்து வைத்திருக்கிறார்கள்.
இந்த விவரப் பத்திரம் ஈஸ்வர ஆண்டு மாசி 9ஆம் தேதி எழுதப்பட்டுள்ளது. இந்த நாள் 1818ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி ஆகும். ஒரு கடினமான தாளில் இந்தப் பத்திரம் உள்ளது. பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் வட்ட வடிவமான கட்டண முத்திரையானது, பத்திரத்தாளின் இடது மேல் புறம் "இன்டாக்ளியோ" எனப்படும் அச்சு முறையில் இரண்டணா என்று தமிழ், (இரண்டணா), ஆங்கிலம் (Two Anna), உருது (தோ அணா) மற்றும் தெலுங்கு (இரடு அணா) மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.
மேல் வலது புறத்தில் கம்பெனியின் வட்ட வடிவ கருவூல முத்திரையில் பொக்கிசம் என்று தமிழ், டிரசரி (Treasury) என்று ஆங்கிலம், கஜானா என்று உருது, பொக்கிசமு என்று தெலுங்கு ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. அன்றைய காலகட்டத்தில் பத்திரப்பதிவுகள் கிழக்கிந்தியக் கம்பெனியின் கருவூலம் மூலம் நடைபெற்றன என்பது இந்த பத்திரத்தின் மூலம் தெரிய வருகிறது.
பத்திரத்தில் உள்ள 23 மானேஜர்களும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்களின் பெயர்களுக்குப் பின்னால் உள்ள சாதிப் பெயர்களின் மூலம் அறிய முடிகிறது. 10 வகையான சாதியைச் சேர்ந்த மேனேஜர்கள் பெயர்கள் அதில் உள்ளன. மேனேஜர்களில் முதலில் கட்டைய கவுண்டன் பெயர் எழுதப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு சாயபு, சாம்பான், குடும்பன், தேவன், ராவுத்தன், செட்டி, நாயக்கன், பிள்ளை, அய்யன் என்று பெயர்களுக்குப் பின்னால் சாதிகள் குறிக்கப்படுகின்றன.