மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளி மாணவரை டிக்கெட் பரிசோதகர் ஒருமையில் திட்டியதாக புகார் மயிலாடுதுறை: மணல்மேடு பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவர் ஒருவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில், அந்த மாற்றுத்திறனாளி மாணவர் கல்லூரி முடித்துவிட்டு, தனது மாற்றுத்திறனாளி அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்க, மணல்மேட்டில் இருந்து ஒன்.சி எண் கொண்ட அரசு நகரப்பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
அப்போது, பேருந்தில் அதிக கூட்டம் இருந்த காரணத்தால், அவரது அடையாள அட்டையைக் காட்டி டிக்கெட் எடுக்க முடியாத சூழல் அமைந்துள்ளது. இந்த நிலையில், பேருந்து மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் சென்று, பயணிகள் அனைவரும் இறங்கும் சமயத்தில், டிக்கெட் பரிசோதகர் மற்றும் டைம் அதிகாரி இருவரும் டிக்கெட் கேட்டு பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அனைவரிடமும் டிக்கெட்டை வாங்கிப் பார்த்த பரிசோதகர் மாற்றுத்திறனாளி மாணவரிடம் கேட்டபோது, கூட்ட நெரிசலில் பேருந்து நடத்துநர் தன் அருகே வரவில்லை எனவும், கூட்ட நெரிசலில் நடத்துநர் தன்னருகே வராததால் ஒரு கை இல்லாத தன்னால் கூட்டத்தில் நுழைந்து டிக்கெட்டைப் பெற முடியவில்லை என்றும், பின்னர் தனது மாற்றுத்திறனாளி அடையாள அட்டையையும் காட்டியுள்ளார்.
அப்போது மாணவரிடம் இருந்து மாற்றுத்திறனாளி அட்டையை வாங்கிக் கொண்ட பரிசோதகர் மோகன், அடையாள அட்டையை கொடுக்க முடியாது எனவும், பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் சக மாணவர்கள் முன்னிலையில், "யோவ்... தரமுடியாது போயா" என்று ஒருமையில் திட்டியதாக மாற்றுத்திறனாளி மாணவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அந்த பரிசோதகர், நீ டிக்கெட் வாங்கிக் கொண்டு தான் பேருந்தில் பயணம் செய்ய வேண்டும். இந்த மாற்றுத்திறனாளி அட்டையை வைத்துக் கொண்டு டிக்கெட் எடுக்கவில்லை என எங்கள் தலைமை கடிதம் அனுப்பி உன்மீது நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்த அவர், அடையாள அட்டையை செல்போனில் படம் எடுத்துக் கொண்டு, நீ இந்த அட்டையை பயன்படுத்த முடியாத அளவுக்கு செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காது எனக்கூறி, அடையாள அட்டையைப் பெற்று வந்ததாகவும், இதனால் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் சக மாணவர்கள் முன்பு, டிக்கெட் பரிசோதகர் தன்னை ஒருமையில் திட்டியதால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அந்த டிக்கெட் பரிசோதகர் மற்றும் டைம் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
பின்னர் இச்சம்வம் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, "அந்த மாணவர் மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை காண்பித்து டிக்கெட் பெற்றிருக்க வேண்டும். இதன் மூலம் இவர்கள் பயணம் செய்யும் தொகையை நாங்கள் அரசிடம் பெற்றுகொள்வோம், அதற்காகத்தான் நாங்கள் வேலை செய்கிறோம்" என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், மாற்றுத்திறனாளி மாணவரின் அடையாள அட்டையைப் பிடிங்கி வைத்துக் கொண்டு, டிக்கெட் பரிசோதகர் மாணவரை ஒருமையில் பேசி அவரைத் திட்டிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அவைக்குறிப்பில் இருந்து நீக்கிய வீடியோவை வெளியிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி!