தருமபுரி:உலக விண்வெளி வாரம் ஒவ்வொரு ஆண்டும் அக்.4 முதல் அக்.10 வரை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் தருமபுரி பச்சமுத்து கலை அறிவியல் கல்லூரியில் ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ சதீஷ் தவான் விண்வெளி தளம் சார்பில், உலக விண்வெளி வார விழா நிகழ்ச்சி இன்று(அக்.7) தொடங்கியது.
விண்வெளி தொடர்பான கண்காட்சியினை சேலம் ஸ்டீல் பிளானட் இயக்குனர் வி.கே.பாண்டே ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாணவர்களின் கண்டுபிடிப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ இணை இயக்குனர் சையத் அகமத் கலந்து கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் உரையாடினார்.
விண்வெளி வார கண்காட்சி வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu) அப்போது அவர் பேசுகையில், "இஸ்ரோ சார்பில் ஒன்பது இடங்களில் உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் தருமபுரி, திண்டுக்கல் மாவட்டத்தில் கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது. இஸ்ரோவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் தயாரிப்புக்கு தேவையான மின்னணு எலக்ட்ரானிக் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வழங்கி வருகின்றனர். செயற்கைக்கோள், தொலைத் தொடர்பு, தொலை உணர்வு, மூன்றாவதாக நேவிகேஷன் சிஸ்டதிற்கு பயன்படுகிறது.
இந்தியாவுக்கான பிரத்யேக நேவிகேஷனை மேலும் வலுப்படுத்தி வருகிறோம். பேரிடர் காலத்தில் பயன்படுத்தும் வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கும் செயற்கைக்கோள்கள் பயன்படுகிறது. கண்காட்சியில் மாதிரி செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்கள் வைக்கப்பட்டுள்ளது. இதை பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்" என பேசினார்.
இதையும் படிங்க :இனி இரண்டு நிலவு.. வானில் நடக்கவிருக்கும் அதிசயத்தை தெரிஞ்சுக்குங்க!
இந்த நிகழ்சியில், கடந்த 1975ம் ஆண்டு ஆரியபட்டா செயற்கைக்கோள் மாதிரியை வேதியல் பிரிவு மாணவி ரேணுகா உருவாக்கி இருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"ரஷ்ய ராக்கெட் மூலம் இந்தியா இதனை செலுத்தினார்கள். இந்தியாவில் முதல் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்டேட்லைட் இதுதான். அதன் நினைவாக கடந்த 1977ம் ஆண்டு இரண்டு ரூபாய் தாளிலும், 1984ம் ஆண்டு ஸ்டாம்ப் அச்சீட்டும் வெளியிட்டார்கள்" என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பூமி தன்னைத் தானே சுற்றி வருவதால் தான் இரவு பகல் ஏற்படுகிறது என்பதை (பூமி மாதிரி) தத்ரூபமாக வடிவமைத்து காட்சிப்படுத்தி உள்ள பேகாரஹள்ளி பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் நவீன் பேசுகையில், பூமி தன்னைத் தானே சுற்றுவதால் தான் இரவு பகல் ஏற்படுகிறது என்பதை காட்சிப்படுத்தி உள்ளேன் என தெரிவித்தார்.
மேலும், Generation Of Satellite என்ற தலைப்பில் மங்கள்யான், சந்திராயன், ஆதித்யா உள்ளிட்ட செயற்கைக்கோள் மாதிரிகளை ஒரே இடத்தில் காட்சிப்படுத்திய பச்சமுத்து கல்லுரி வேதியியல் பிரிவைச் சார்ந்த மாணவி எல்.வர்மாஸ்ரீ பேசுகையில், ஆரியப்பட்டா முதல் சந்திராயான் வரை செயற்கைக்கோள் மாதிரிகளை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தி உள்ளோம். மேலும், செயற்கைக்கோளானது தொலைத் தொடர்பு மற்றும் வானிலை அறிக்கை பற்றிய அறியவும் பயன்படுகிறது" என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செயற்கைக்கோளுக்கு சோலார் சிஸ்டம் முக்கியமானது என்பதை உணர்த்தும் வகையில், ஆதித்யா எல் 1 செயற்கைக்கோள் மாதிரியை உருவாக்கி காட்சிப்படுத்திய அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவி சுக வர்ஷினி பேசுகையில், செயற்கைக்கோள்கள் தரையிறங்க சோலார் சிஸ்டம் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தும் வகையில் ஆதித்யா எல் 1 செயற்கைக்கோள் மாதிரியை வடிவமைத்துள்ளேன்" என்றார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி கூடுதல் ஆட்சியர் கௌரவ் குமார், பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தாளாளர் பாஸ்கர், இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்