தருமபுரி: தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த மிட்டாரெட்டிஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கோம்பேரி கிராமம் அருகே, சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவில், மலைப் பகுதிகளுக்கு நடுவே பையன்குட்டை, கஜமான் குட்டை, ஒட்டன்கொல்லை, மன்னன் கொல்லை, வாழைமரத்து கொட்டாய் உள்ளிட்ட 5 கிராமங்கள் உள்ளன. இங்கு 100 குடும்பங்களில் 300-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும், 400 ஏக்கர் பரப்பளவு பட்டா நிலத்தில் விவசாயம் செய்து வரும் அப்பகுதிக்கு மக்கள், இதுவரை சாலை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் எதுவும் இல்லாமல் இருளில் தவித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு அப்பகுதி பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன், அப்பகுதிக்கு நேரில் சென்று குறைகளைக் கேட்டறிந்தார்.
இதில் முதற்கட்டமாக, எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம், 15 லட்சம் ரூபாய் மதிப்பில், சோலார் மின்விளக்குகள் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 20 இடங்களில் சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (பிப்.6) இரவு, மின் விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். அதன்பின், அங்குள்ள வீடுகளுக்குச் சென்று, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது பொதுமக்கள், நாங்கள் குடிநீர் வசதி இல்லாமல் தவிக்கிறோம், அதனை ஏற்பாடு செய்து கொடுங்கள் என தெரிவித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து இன்று (பிப்.8) காலை, கோம்பேரி பகுதியில் இருந்து பொம்மிடி அருகே உள்ள காளிகரம்பு பகுதிக்கு வனப்பகுதி வழியாக சென்று ஆய்வு செய்தார்.