திடீர் சோதனையில் இறங்கிய தருமபுரி மாவட்ட ஆட்சியர் தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூக நலத்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறையின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, நேற்று (பிப்.17) திடீரென ஆட்சியர் வளாகத்தில் உள்ள துறை சார்ந்த அலுவலகங்களின் ஆய்வு மேற்கொண்டார்.
இதன்படி, சமுக நலத்துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, இருளர் சமூக மக்களின் வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கான தடையில்லா சான்று (NOC) வழங்காமல் நிலுவையில் இருந்ததைக் கண்டித்து, அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, உண்டு உறைவிடப் பள்ளிகளில் பணியாற்றும் சமையலர்களை நிரந்தரம் செய்வதற்கான பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், அந்த கோப்புகளை கொடுக்குமாறு அறிவுறுத்தினார். அப்பொழுது கோப்புகளை எடுப்பதற்கு முடியாமல் ஊழியர்கள் திணறினர். இதனால் கோபமடைந்த மாவட்ட ஆட்சியர், துறை அலுவலர்களைக் கடிந்து கொண்டார்.
மேலும், பிரியாணி வாங்கி கொடுத்தால் பணி செய்வதாக புகார் எழுந்ததையும் சுட்டிக்காட்டி சராமாரியாக கேள்வி எழுப்பினார். பின்னர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே உண்டு உறைவிடப் பள்ளி சமையலர்களை பணி நிரந்தர ஆணை அனுப்பப்பட்டுள்ளதைக் கண்ட மாவட்ட ஆட்சியர், கோப்புகளை சரி பார்த்து பணி நிரந்த ஆணையை அனுப்ப இரண்டு மாத காலம் ஆகிறதா என்று கேள்வி எழுப்பினார்.
இந்த பணிக்கு எதற்கு இத்தனை பேர் என்று கேள்வி எழுப்பிய ஆட்சியர், எதையோ எதிர்பார்த்து காலதாமதம் செய்கிறீர்களா என்று சராமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும், அலுவலர்கள் ஆவணங்களை சரிவர பாதுகாக்காமல் வைத்திருப்படதைக் கண்டு கடுமையாக கண்டித்தார்.
மேலும், திங்கள்கிழமை (பிப்.19) உண்டு உறைவிடப் பள்ளியில் சமையலர்களுக்கு பணி நிரந்த ஆணை வழங்கி, அதன் நகல்களை தனக்கும் உடனடியாக அனுப்ப வேண்டும் என எச்சரித்தார். முன்னதாக, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மற்ற துறை சார்ந்த பணிகள் மற்றும் வளாகத்தில் காணப்பட்ட குறைபாடுகள், பணி தொய்வுகளைக் கண்டித்தார். மேலும், அவற்றை ஒழுங்குபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:சுவாமிமலை முருகன் கோயிலில் இரு மின்தூக்கி அமைக்க ரூ.3 கோடியா? - திமுக எம்.பி எஸ்.கல்யாணசுந்தரம் கேள்வி!