தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரம் ஆதினத்தை மிரட்டிய வழக்கு.. தலைமறைவாக இருந்த குற்றவாளியை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய போலீசார்! - Dharmapuram Adheenam Case - DHARMAPURAM ADHEENAM CASE

Dharmapuram Adheenam Case: தருமபுரம் ஆதீனத்தின் தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் செந்தில் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யபட்ட நபர் செந்தில்
கைது செய்யபட்ட நபர் செந்தில் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 12, 2024, 9:43 AM IST

மயிலாடுதுறை:தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமா சாரிய சுவாமிகள் தொடர்பான ஆபாச ஆடியோ, வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாகக் கடந்த பிப்ரவரி மாதம் மயிலாடுதுறை போலீசார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து பாஜகவின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், ஆடுதுறை வினோத், விக்னேஷ், செம்பனார்கோயில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, ஸ்ரீநிவாஸ் ஆகிய 5 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் 90 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த இரண்டாவது நபராக இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தருமபுரம் ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் ரெங்கசாமி மகன் செந்தில் (48), என்பவர் 4 மாதங்களாகத் தேடப்பட்டு வந்த நிலையில் உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் இருப்பதாக மயிலாடுதுறை போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மயிலாடுதுறை சிறப்பு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் போலீசார் விமானம் மூலம் வாரணாசிக்குச் சென்று, அங்கு மொட்டை அடித்து கொண்டு, தாடி வைத்து மாறு வேடத்தில் பதுங்கி இருந்த செந்திலை கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட திருவையாறு செந்திலை அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூர் வரை அழைத்து வந்து, பின்னர் போலீஸ் வாகனத்தில் மயிலாடுதுறை காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, காவல் ஆய்வாளர் சுப்ரியா தலைமையிலான போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து, நீதிபதி கலைவாணி முன்னிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் முதல்முறையாக நேற்று (10.06.2024) முன்ஜாமீன் கேட்டு மனு கோரியிருந்தார். இதில் அரசு தரப்பு வழக்கறிஞர் ராமசேயோனின் செந்திலை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என வாதிட்டதால் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையு படிங்க:குறைந்து வரும் பார்வை திறன்... கண்புரை நோயாக இருக்கலாமா?: மருத்துவர் கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details