மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடர்பான வீடியோ, ஆடியோ இருப்பதாகக் கூறி, பணம் கேட்டு மிரட்டியதாக ஆதீனகர்த்தரின் சகோதரரும், அவரது உதவியாளருமான விருத்தகிரி, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி புகார் அளித்தார்.
புகாரின் பேரில், மயிலாடுதுறை பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் உள்ளிட்ட 9 பேர் மீது மயிலாடுதுறை போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கலைமகள் கல்வி குழுமத்தின் தாளாளர் குடியரசு, ஸ்ரீநிவாஸ், விக்னேஷ், வினோத் ஆகிய 4 பேரை கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலம் ராய்கர் மாவட்டம், அலிபாக்கில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அகோரத்தை, கடந்த மார்ச் 15ஆம் தேதி மயிலாடுதுறை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பின்னர், அகோரத்தை திருச்சம்பள்ளியில் உள்ள தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி கனிமொழி, மார்ச் 28ஆம் தேதி வரை அகோரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டிருந்த நிலையில், போலீசார் மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பாஜக மாவட்டத் தலைவர் அகோரத்தை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சுப்ரியா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதனையடுத்து, தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு அகோரத்தை போலீசார் அழைத்துச் சென்றனர். வழக்கை விசாரித்த நீதிபதி கனிமொழி, அகோரத்தை ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அகோரத்தை போலீசார் விசாரணைக்கு மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பின்னர் மார்ச் 27ஆம் தேதி மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
இதையும் படிங்க:மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா அறிவிப்பு! - Mayiladuthurai CandidateR Sudha