சென்னை:கோவை மாவட்டம், மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வாழ்நாள் அறங்காவலராக பணியாற்றிய கிருஷ்ணசாமி என்பவரை நிர்வாக குறைபாடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இடை நீக்கம் செய்து கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜனவரி 3ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், “கோயிலை நிறுவிய பரம்பரை அறங்காவலரான மறைந்த மந்தன நரசிம்ம ராஜு, கடந்த 1985ம் ஆண்டு தன்னுடன் சேர்த்து ஐந்து வாழ்நாள் அறங்காவலர்களை நியமித்ததாகவும், கடந்த 40 ஆண்டுகளில் அறங்காவலர்களின் சொந்த நிதியில், கிணறு தோண்டி, குழாய் இணைப்புகள் கொடுத்து, மின் விளக்குகள் பொருத்தி, கோயிலை ஒட்டியுள்ள மலைக்குச் செல்ல நடைபாதை அமைத்து, அன்னதான மண்டபம் அமைத்து, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கோயிலின் வளர்ச்சிக்காகக் கடுமையாக உழைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1999 - 2022ம் ஆண்டுகளுக்கு இடையில் மற்ற நான்கு அறங்காவலர்கள் மரணமடைந்து விட்ட நிலையில், சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்ற, நான்கு பக்தர்களை அறங்காவலர்களாக நியமிக்கும்படி, கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்குக் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் கடிதம் அனுப்பியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இணை ஆணையரின் பரிந்துரையை ஏற்று, கோயிலுக்குச் செயல் அலுவலரை நியமித்து அறநிலையத் துறை ஆணையர், 2023 அக்டோபரில் உத்தரவு பிறப்பித்ததற்கு எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், நான்கு வாழ்நாள் அறங்காவலர்களை நியமிக்கக் கோரிய தனது பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், அப்போது இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து நடவடிக்கை துவங்கியுள்ளதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்ததை ஏற்று வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்ததாகக் கூறியுள்ளார்.
மேலும், தனக்கு வயதாகி விட்டதாலும், வாழ்நாள் அறங்காவலர்களை நியமிக்கும் வரை, கோயிலுக்கு மண்டபம் கட்டிக்கொடுத்தது போன்ற காரியங்களைச் செய்த கண்ணன் என்பவரைத் தற்காலிக அறங்காவலராகச் செயல்படும்படி கோரியதாகவும், அதை ஏற்று அவர் தற்காலிக அறங்காவலராகச் செயல்பட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சித்ரா பவுர்ணமி விழா குறித்து விவாதிக்க நடந்த கூட்டத்தில் மற்ற உறுப்பினர்கள், கோயில் வரவு செலவு விவரங்களைக் கேட்ட போது, கண்ணன் துப்பாக்கி காட்டி மிரட்டியதால், அவரை பதவியில் இருந்து நீக்கியதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.