சென்னை:நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், இடைக்கால தடை கோரிய மனு மீதான விசாரணையை ஜனவரி 8-ஆம் தேதிக்கு தள்ளிவைத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
நடிகை நயன்தாரா தனது திருமண ஆவண படத்துக்காக, நடிகர் தனுஷின் ‘வொண்டர் பார் பிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ‘நானும் ரவுடி தான்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.
இதற்கு, ரூ.10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நடிகை நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த நோட்டீசுக்கு பதிலளித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை, தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழ்நிலையில் நடிகை நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு, நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.