தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி நடக்கவுள்ள தை பூசத் திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை புரிகின்றனர்.
குறிப்பாக, அருப்புக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனாக மாலை அணிந்து விரதம் இருந்தும், காவடி எடுத்தும், அழகு குத்தி பாதயாத்திரையாக வருகின்றனர்.
வேடமணிந்து திருச்செந்தூர் கோயிலை நோக்கிய படையெடுக்கும் பக்தர்கள் (ETV Bharat Tamil Nadu)
இதையும் படிங்க: வைகுண்ட ஏகாதசி: ரெங்கா! ரெங்கா! பெருமாளுடன் சொர்க்கவாசலைக் கடந்த பக்தர்கள்!
இந்நிலையில் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் மாலை அணிந்த பக்தர்கள் முருகன் வேடமணிந்து உடலில் திருநீறு பூசிக்கொண்டு தங்களது குடும்பத்துடன் பாதயாத்திரையாக வருகை தந்த வண்ணம் உள்ளனர். அதில், சிவன், பார்வதி, முருகன், அர்த்தநாதீஸ்வரர், சுடலை போன்ற வேடங்கள் அணிந்தும் பக்தர்கள் ஊர்வலமாக வந்த சம்பவம் மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
மேலும் அலகு குத்தியப்படியும், காவடி எடுத்தும் பக்தர்கள் ஆட்டம், பாட்டத்துடன் மேளதாளங்கள் முழங்க திருச்செந்தூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.