மயிலாடுதுறை:இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறையின் நகரப் பகுதியில் அமைந்துள்ள காவிரி துலாக்கட்டம் 12 தீர்த்த கிணறுகள் உள்ள புனித இடமாகும். கங்கை முதலான புண்ணிய நதிகளில் பக்தர்கள் தன் பாவச் சுமைகளை போக்குவதற்காக நீராடுவது வழக்கம்.
இதனால் இந்த காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் கங்கை முதலான புண்ணிய நதிகள் இங்கு வந்து ஐப்பசி மாதம் முழுவதும் நீராடி சிவபெருமானை வணங்கி பக்தர்களினால் உண்டான தங்களது பாவச்சுமையை போக்கிக் கொண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. இந்த காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடி புனித நீராடிச் செல்வர்.
ஆனால், மேட்டூரில் திறக்கப்பட்ட உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடி மயிலாடுதுறை மாவட்டத்தில் கடலில் கலந்து வரும் நிலையில், காவிரி ஆற்றில் தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் வறண்டு கிடக்கிறது. இந்நிலையில், ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாட மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் போர்வெல் மூலம் புஷ்கர தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு, பக்தர்கள் புனித நீராடும் வகையில் பிரத்யேகமாக குழாய் மூலம் ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் குறைந்த அளவே கூட்டம் காணப்பட்டது.