சென்னை:முதலீட்டாளர்களை மோசடி செய்த வழக்கில் மயிலாப்பூர் நிதி நிறுவன இயக்குனர் தேவநாதனை ஏழு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு நேற்று (ஆகஸ்ட் 27 ) சிறப்பு நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. அதன் அடிப்படையில், சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து தேவநாதனிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், புகார்களின் அடிப்படையில் 25 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தேவநாதன் 500 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் மோசடி செய்த பணத்தில் பினாமிகள் பேரில், எந்த ஊர்களில் அசையா சொத்துக்களை வாங்கி குவித்திருக்கிறார், வேறு என்னென்ன தொழில்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பினாமிகள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேவநாதன் குடும்பத்தினரின் பெயரில் வேறு தொழில்களில் பண முதலீடு செய்துள்ளாரா? முதலீடுகள் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வைத்திருகின்றனர் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், மோசடி செய்வதற்காக திட்டமிட்டே தன்னுடைய தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை இயக்குனர்களாக தேவநாதன் நியமித்துள்ளார் என தெரியவந்துள்ளது.