சென்னை: தமிழகத்தில் ராகிங் தடுப்பு சட்டம் எப்போது கொண்டு வரப்பட்டது என்பதையும், அந்த சட்டம் கொண்டு வரப்பட காரணமாக இருந்த சிதம்பரம் மருத்துவ மாணவர் கொலை எப்படி நிகழ்ந்தது என்பதையும் தெரிந்து கொள்வோம்.
நாவரசு கொலை செய்யப்பட்டது எப்படி?:தமிழகத்தில் கடந்த 1996ம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை மருத்துவ கல்லூரியில் படித்த முதலாமாண்டு மருத்துவ மாணவன் பொன் நாவரசு, விடுதியில் தங்கியிருந்த சக மாணவர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கடலூர் மாவட்ட நீதிமன்றம் 1998ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மிகவும் கொடூரமான முறையில் நாவரசு கொலை நடந்திருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
இதன்படி, கொலையான நாவரசுவின் உடல் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். உறுப்புகள் இல்லாத முண்டத்தை ஒரு சூட்கேசிலும், உடல் உறுப்புகளை மற்றொரு சூட்கேசிலும் கொலையாளி எடுத்துள்ளார். நாவரசுவின் தலையை ஒரு ஜிப் பேக்கில் அடைத்து எடுத்துள்ளார். நாவரசு உடலில் இருந்த மோதிரம், வாட்ச் ஆகியவற்றை எடுத்துக் கொண்ட பின்னர் கல்லூரி விடுதியின் மேல் தளத்திற்குச் சென்று அவரது உடைகளை எரித்துள்ளார்.
தலை இருந்த பையை கால்வாயில் வீசி எறிந்துள்ளார். பின்னர் இரண்டு சூட்கேஸ்களுடன் சென்று தஞ்சையிலிருந்து, சென்னை நோக்கிச் சென்ற ரயிலில் ஏறி புறப்பட்டுள்ளார். ரயில் கடலூரைத் தாண்டும் போது உடலுறுப்புகளை ஆற்றில் வீசியுள்ளார். பின்னர் சென்னை சென்று தாம்பரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பேருந்தின் பின்னிருக்கையில் உறுப்புகள் இல்லாத முண்டத்துடன் இருந்த சூட்கேசை வைத்து விட்டு கொலையாளி சிதம்பரம் திரும்பி விட்டதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த கொலையை கொலையாளி தனியாக செய்திருக்க முடியாது எனவும், உடல்களை பல்வேறு இடங்களில் வீசிச் செல்ல மற்றவர்களின் துணை கண்டிப்பாக தேவைப்பட்டிருக்கும் எனவும் கூறப்பட்டது. ஆனால், காவல்துறையின் பல கட்ட விசாரணையில் மற்ற மாணவர்களுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைக்காததால் ஜான் டேவிட் மீது மட்டும் கொலை வழக்கு (ஐபிசி 302) மற்றும் தடயங்களை அழிக்க முயற்சித்ததாக (ஐபிசி 364) வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
விடுதலை: இந்த வழக்கை விசாரித்த கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், ஜான் டேவிட்டுக்கு 1998ம் ஆண்டு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் (ஓய்வு) நீதிபதி பாலசுப்ரமணியன், ஜான் டேவிட் மீதான குற்றத்திற்கு போதிய ஆதாரங்களை காவல்துறை தாக்கல் செய்யவில்லை என தெரிவித்து கடந்த 2001ம் ஆண்டு அவரை விடுதலை செய்தது.
இந்த விடுதலையை எதிர்த்து காவல்துறை சார்பில் தொடரப்பட்ட மேல் முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜான் டேவிட்டின் இரட்டை ஆயுள் தண்டனையை ஒரு ஆயுள் தண்டனையாக குறைத்து, சம்மந்தபட்ட நீதிமன்றத்தில் சரணடைய 2011ம் ஆண்டு உத்தரவிட்டது. தற்போது வரை 17 ஆண்டுகளாக ஜான் டேவிட் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.