தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தி.மலை கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்.. உதயநிதி ஸ்டாலின்! - UDHAYANIDHI STALIN

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்குத் தேவையான கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2024, 12:14 PM IST

திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று கார்த்திகை தீபத் திருவிழா. இவ்விழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு வரும் மகா தீபத்தை காண வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற டிசம்பர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக காவல் தெய்வம் உற்சவம் நடைபெற உள்ளது. இவ்விழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். 10ஆம் நாள் விழாவான டிசம்பர் மாதம் 13ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது. அப்போது, தமிழ்நாடு மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுமார் 40 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் செல்வார்கள்.

தற்போது இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களிடம் தீபத் திருவிழாவின் போது மேற்கொள்ளப்படவுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், "கார்த்திகை தீபத் திருவிழா திருத்தேர் உற்சவத்தின் போது, சுமார் 6 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்றும், பரணி தீபம் மற்றும் மகா தீபம் அன்று 40 முதல் 50 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கிரிவலப்பாதையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முன்னேற்பாடுகள் தீவிரம்:திமுக ஆட்சி அமைந்த பிறகு திருவண்ணாமலை மாநகரில் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு துறைகள் மூலம் சுமார் ரூ.30 கோடிக்கு மேல் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக முக்கிய இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் அதிகமாக பொருத்தப்பட்டுள்ளது. தீபத்ததிருவிழாவின் போது பொதுமக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் முதலுதவி மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 400க்கும் மேற்பட்ட கழிவறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

கிரிவலப்பாதையில் வழங்கப்படும் அன்னதான உணவின் தரத்தை கண்காணிக்க உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் அதற்கென தனியாக அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தற்காலிக பேருந்து நிலையங்கள், மின்விளக்கு வசதிகளும் செய்து தரப்படும். இதற்காக, முதலமைச்சர் ரூ.37 கோடி மதிப்பில் திருவண்ணாமலை திருக்கோயிலுக்கான மாஸ்டர் பிளான்ங் திட்டங்கள் அறிவுறுத்தியுள்ளார். கோவிலுக்குள் காத்திருப்பு மண்டபங்கள், அன்னதான கூடங்கள், கோயில் குளத்தைத் தூர் வாரும் பணிகள் உள்ளிட்டவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. சில பணிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றது.

தீபத்திருவிழா குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் சேகர்பாபு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. கிரிவலப்பாதையில் ஏற்கனவே 8 சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது, மேலும் 6 சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்:இதுகுறித்து ஏற்கனவே மன்னிப்பு கேட்டதாக செய்தியில் பார்த்தேன். இதனை பெரிதாக்க விரும்பவில்லை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சில சமுதாய மக்களின் மனம் வருந்தக் கூடாது என்பதற்காக பல வரிகளை நீக்கினார். தற்போது தெரிந்தோ, தெரியாமலோ தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது, இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது பொறுத்திருந்து பார்ப்போம்" எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, "அண்ணாமலையார் கோவிலுக்கு யானை கொண்டு வரப்படுமா என்ற கேள்விக்கு, சட்டதிட்டத்திற்குட்பட்டு தான் கோயிலுக்கு யானை கொண்டு வரப்படும். ஆனால் தற்போதுள்ள வனத்துறையின் சட்டத்தின் படி, கோயிலுக்கு யானை கொண்டு வருகின்ற சூழல் இல்லை.

மேலும் தீபத் திருவிழாவின் போது எத்தனை லட்சம் பக்தர்கள் வந்தாலும், அவர்களுக்கு ஏற்றார் போல் குடிநீர் வசதி ஏற்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தற்போது 50 லட்சம் குடிநீர் பாட்டில்கள் விழாவின் போது வழங்கப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சரும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கியுள்ளார், அவை விரைவில் நடைமுறைப் படுத்தப்படும்.

கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் கட்டளை தாரர்களுக்கும், உபயதாரர்களுக்கும் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றார். மதுரை, பழனியில் உள்ளது போல் கருவறை விமானத்தில் தங்கத் தகடு அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credit - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details