தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஒரே நாளில் 20 செ.மீ மழைக்கு வாய்ப்பு..பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்" - துணை முதல்வர் உதயநிதி! - DEPUTY CM UDHAYANIDHI STALIN

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்புகள் அமைத்து மூடும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின்
கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2024, 9:36 PM IST

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னையில் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மழை தீவிரம் அடையும் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசித்தார். அப்போது, மழை பாதிப்புகள் குறித்த புகார்களை தெரிவிப்பதற்காக இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்ட மக்களிடம் உதயநிதி ஸ்டாலின் குறைகளைக் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது சென்னை மாநகராட்சி மேயர் பிரிய, துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மண்டல வாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அடிப்படையில் அடுத்து வரும் சில நாட்களில் தமிழ்நாட்டில் அதி தீவிர கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 20 செ.மீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவு இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.

மழை பாதிப்பு குறித்து 1913 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் 150 பேர் கொண்ட குழு, 4 ஷிப்ட்களாக செயல்படுவார்கள். 13,000 தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் உயிரும், உடமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அரசின் முதன்மை நோக்கம்.

இதையும் படிங்க:"சென்னைக்கு கனமழை எச்சரிக்கை"; அடுத்த 5 நாள்களில் இந்த மாவட்டங்களிலும் மழை வெளுக்கப் போகுது!

113 மோட்டார் பம்புகள் தாழ்வான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து வார்டுகளிலும் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 83 கழிவுநீர் உறிஞ்சும் லாரிகள் உள்ளன. பணிகளை மேற்பார்வையிட பிற மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மழை காலத்தில் அரசு தரும் எச்சரிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

TN Alert:தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு அலர்ட் என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதை டவுன்லோடு செய்து பொதுமக்கள் மழை பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். பல்வேறு வானிலை பாதிப்புகளை பயன்படுத்தி வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களை கண்காணித்து வருகிறோம். ஓரிரு இடங்களில் மழை நீர் வடிகால் பணிகள் முடிவு பெறாமல் இருந்து இருந்தால் அவற்றை சுற்றி வேலி அமைக்க உத்தரவிட்டுள்ளோம்.

மற்ற மாவட்டங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் சென்னைக்கு வர வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தரையின் மேல் செல்லக்கூடிய அனைத்து கேபிள்களையும் மண்ணுக்குள் புதைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. தாழ்வான மின் மாற்றிகள் அதிக உயரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து மின்சார துறைக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மெட்ரோ குடிநீர் வாரியமும், 356 குடிநீர் மையமும் 24 மணி நேரமும் ஜெனரேட்டர் மூலமாக இயங்கி அதன் மூலம் தண்ணீர் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 673 ஜெனரேட்டர் இயந்திரங்கள் 83 கூடுதல் குடிநீர் லாரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது . அனைவரும் ஒன்றிணைந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்” என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details