சென்னை :சென்னை, சேத்துப்பட்டில் உள்ள எம்சிசி பள்ளியில் 1974ம் ஆண்டு படித்த மாணவர்களின் பொன் விழா ஆண்டு Alumni Meet நடைபெற்றது. இதில், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், பள்ளியின் ‘Golden Jubilee 1974 Batch’ தலைவருமான ஸ்ரீதர் வாண்டையார் கலந்து கொண்டார். மேலும், சிறப்பு அழைப்பாளராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுகளில், சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளி சார்பில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
அப்போது மேடையில் பேசிய அவர், "மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் என்னை அழைத்தற்கு நன்றி. இந்த நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று நேரம் கேட்டபோது டிசம்பர் மாதம் வைத்துள்ளீர்கள். பருவமழை காலம் என்பதால் சென்னையிலிருந்தால் வருகிறேன் என்று தெரிவித்து இருந்தேன்.
மழையால் இரண்டு நாட்கள் வெளியூர்களில் இருந்தேன். இயற்கை இன்று உங்களுக்கு உதவி உள்ளது. பொதுவாக குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு தான் பெற்றவர்கள் செல்வார்கள். பள்ளியில் குழந்தைகள் செய்யும் தவறுகளை பெற்றோர்களிடம் கூறுவதற்காக அழைப்பார்கள். என் தந்தை படித்த பள்ளிக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளீர்கள் நான் தவறாக சொல்லவில்லை. என் தந்தை படித்த பள்ளிக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது.
தமிழக முதலமைச்சரை உருவாக்கிய சிறப்பான பள்ளி இது. என் தந்தை மட்டுமல்ல என் பெரியப்பாக்கள், திமுக உறவுகள், காங்கிரஸ் உறவுகளும் இங்கு உள்ளார்கள். தலைமை செயலகத்தில் உள்ளது போல் உள்ளது. 'நம்ம பள்ளி நம்ம பவுண்டேஷன்' என்ற திட்டத்தை இந்த பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு தான் தமிழக முதலமைச்சர் தொடங்கினார்.