தஞ்சாவூர்: தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் டீசர் கடந்த 16ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனை நடிகர் கமலஹாசனின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில், காஷ்மீர் மக்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து இந்தப் படம் எடுக்கப்பட்டு உள்ளது எனக் கூறி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (பிப்.22) நடைபெற்றது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்திற்குத் தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்றும், காஷ்மீர் மக்களைக் கொச்சைப்படுத்தக் கூடாது என்றும் கோஷமிட்டனர்.