சென்னை:டெல்லியில் 2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் கடத்தப்பட்ட வழக்கில், மூளையாகச் செயல்பட்டதாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை கடந்த 9ஆம் தேதி டெல்லியில் வைத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மேலும், ஜாபர் சாதிக்கை ஏழு நாட்கள் காவலில் எடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை டெல்லி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜாபர் சாதிக் தடை செய்யப்பட்டுள்ள ஏதேனும் அமைப்பினருக்கு பணம் கொடுத்து உதவி செய்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்துவதற்கான ஆவணங்களை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் வழக்கினை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், என்சிபி அதிகாரிகளிடம் இருந்து பெறப்படும் ஆவணங்களை ஆய்வு செய்த பின்பு, தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஏதேனும் பணம் கொடுக்கப்பட்டிருந்தால், வழக்குப் பதிவு செய்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இந்த வழக்கை கையில் எடுக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.