சென்னை:மத்திய பாஜக அரசு, கடந்த 2020ஆம் ஆண்டு தேசிய புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தது. அதனை இந்தியா முழுவதும் படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. தேசிய கல்விக்கொள்கை வரைவு வெளியிட்டபோதே, எதிர்கட்சியாக இருந்த திமுக கடுமையாக எதிர்த்தது. மேலும், தேசியக் கல்விக்கொள்கை குலக்கல்வி முறையை ஊக்குவிக்கிறது எனக் கூறி வந்தது.
மேலும், இந்த கொள்கையில் இடம் பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள் தமிழ்நாட்டிற்கு எதிர்ப்பாக இருப்பதால், அதனை ஏற்க முடியாது எனவும், தமிழ்நாட்டிற்கு என்று பிரத்யேகமாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்காக ஓய்வு பெற்ற டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்து, ஓராண்டுக்குள் அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதன்படி, 2022 ஜூன் 1ஆம் தேதி அமைக்கப்பட்ட முருகேசன் தலைமையிலான இந்தக் குழுவில் கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதிகள் இடம்பெற்று இருந்தனர். பொதுமக்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரிடம் இருந்தும், கல்வி நிறுவனங்களிடம் இருந்தும் ஆலோசனைகளைப் பெற்று, முருகேசன் தலைமையிலான குழு அறிக்கையை உருவாக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டது.