சென்னை: தமிழ் திரையுலகின் தவிர்க்கமுடியா நடிகராக இருந்த டெல்லி கணேஷ் (80) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். திரைத்துறை, சின்னத்திரை என பல பரிமாணங்களில் மக்களை மகிழ்வித்த இவரது இழப்பை தாங்கமுடியாத திரையுலக பிரபலங்கள் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த வேளையில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் உள்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், நேரில் சென்றும் டெல்லி கணேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், 'புகழ்பெற்ற திரைப்பட ஆளுமை டெல்லி கணேஷ் நாடகத் துறையின் மீதும் நாட்டம் கொண்டிருந்தார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த வருத்தமும், அவரின் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன். தமது ஈடு இணையற்ற நடிப்பாற்றலால் தான் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலம் தலைமுறைகள் கடந்தும் அவர் ரசிகர்களால் நினைவுகூரப்படுவார்' என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் கடிதத்தில், “மூத்த திரைக்கலைஞர் 'டெல்லி' கணேஷ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து, தன்னுடைய அடையாளத்தை அழுத்தமாகப் பதித்தவர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவரது நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் மக்களால் மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் அளவுக்குச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராக அவர் திகழ்ந்தார். வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் டெல்லி கணேஷ் அவர்கள் பல தொடர்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். கலைஞர் கருணாநிதி அவர்களின் எழுத்தில் உருவான இளைஞன் திரைப்படத்திலும் டெல்லி கணேஷ் அவர்கள் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் திரைத்துறை வரலாற்றில் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் பல நகைச்சுவை, குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவரான அவரது மறைவு திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.