வேலூர்: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேரனுமான துரை தயாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மார்ச் 14ஆம் தேதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிஎம்சி மருத்துவமனையின் ஏ-பிளாக்கில் பிசியோதெரபி சிகிச்சை பெற்று வரும் அவருடன் அவரது தந்தை அழகிரி மற்றும் குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.
அவர் சிகிச்சை பெற்று வரும் தளம் காவல் துறையினரின் முழு கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்று (ஆக.10) வந்த ஒரு மின்னஞ்சலில் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் குறிப்பு இருந்துள்ளது. இதையடுத்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கிரண் ஸ்ருதிக்கு மின்னஞ்சல் வழியாகவே புகார் அனுப்பி வைக்கப்பட்டது.
மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரம், துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை ஏ-பிளாக்குக்கு கூடுதலாக ஓர் உதவியாளர் தலைமையில் 3 காவலர்கள் சீருடை அணியாமல் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை தளத்துக்கு 3 காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.