சென்னை: புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடித்ததில் கூறியிருப்பதாவது:
"மாநில அரசுகள் கல்வி விவகாரத்தில் அரசியலை தவிர்த்து, கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, மாணவர்களின் அறிவு, திறன், மற்றும் எதிர்காலத்திற்கான வேலைவாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை 2020 சீர்திருத்தம் மட்டும் இல்லாமல் உலக அளவில் இந்திய கல்வி அமைப்பை மேம்படுத்தும் விதமாகவும், கலாச்சார பன்முகத்தன்மையை மேம்படுத்தும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கடந்த 2022ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி சென்னை வந்த போது, தமிழ் மொழியின் உலக அளவில் சிறந்து விளங்குவது குறித்து பேசியுள்ளார். பிரதமர் மோடி வலியுறுத்தலின் பேரில் காசி தமிழ்ச் சங்கமம் மற்றும் சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் மத்திய அரசால் நடத்தப்படுகிறது. கடந்த 2022இல் காசி தமிழ்ச் சங்கமத்தின் போது, பிரதமர் மோடி 13 மொழிகளில் திருக்குறளை வெளியிட்டார்.
அதே போல் திருக்குறள் நூல் 15 மொழிகளிலும், 46 இலக்கிய நூல் புத்தகங்கள் 118 பகுதியாகவும் பிரதமர் மோடியால் காசி தமிழ்ச் சங்கமத்தில் வெளியிடப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்கமத்தில் 41 சிறந்த தமிழ் இலக்கியங்கள் மத்திய தமிழ் பல்கலைகழகம் மூலம் மொழிபெயர்க்கப்பட்டு, நானும், உத்தரப்பிரதேச முதல்வரும் வெளியிட்டோம்.
இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமத்தில் சித்தா மருத்துவம் மற்றும் தமிழ் இலக்கியத்தில் அகஸ்தியரின் பங்கு முக்கிய பகுதியாக முன்னிலைப்படுத்தப்படுகிறது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட அனுவதினி மற்றும் பாஷினி ஆகிய கருவிகள் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளுக்கு உடனடியாக மொழிபெயர்ப்பு செய்ய உருவாக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறையில் முக்கிய போட்டித் தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. மேலும் கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பிரதமர் மோடியின் சிங்கப்பூர் பயணத்தின் போது, இந்தியாவின் திருக்குறள் கலாச்சார மையத்தை நிறுவினார்.
உலகளவில் தமிழ் மொழி பழமையான மொழியாகும். சுப்ரமணி பாரதியாரின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், இந்திய அளவில் பாரதிய பாஷா உத்சவ் கொண்டாடப்படுகிறது. மத்திய அரசு தமிழ் மொழியின் இலக்கியத்தை போற்றும் வகையில், பிரபல கல்வி நிறுவனங்களில் பாரதியாரின் பெயரில் இருக்கைகள் அமைத்துள்ளது. 8வது அட்டவணையில் தமிழின் முக்கியத்துவத்தை போற்றும் வகையில் இடம்பெற்றுள்ளது.