மயிலாடுதுறை :மயிலாடுதுறை மாவட்டத்தில், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் விதமாக, தரங்கம்பாடி கடற்கரை மற்றும் டேனிஷ் கோட்டை உள்ளது. டென்மார்க் கடற்படை தளபதி கேப்டன் ஒவ்கிட் என்பவரால் தஞ்சை ரகுநாத நாயக்கர் மன்னரிடம் இருந்து ரூ.3,111க்கு தரங்கம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இரண்டரை மைல் பரப்பளவு டென்மார்க் நாட்டவரால் வாங்கி கிபி 1620ம் ஆண்டு தரங்கம்பாடி கடற்கரையை யொட்டி புகழ் பெற்ற டேனிஷ் கோட்டை கட்டப்பட்டது.
கீழ்தளத்தில் கிடங்குகள் மற்றும் வீரர்கள் தங்கும் அறை, குதிரை லாயம், மேல் தளத்தில் தளபதிகள் மற்றும் மதகுருமார்கள் தங்கும் அறை, தூக்குமேடை, வெடிமருந்து வைக்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளாக இந்த கோட்டை பிரம்மாண்டமாக பீரங்கிகளுடன் கட்டப்பட்டது.
இந்த கோட்டை இந்தியாவில் டேனிஷ் வர்த்தக மையத்தின் தலைமை பீடமாக அமைந்தது. 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மத்திய அரசின் பொறுப்பில் இக்கோட்டை இருந்தது. 1978ம் ஆண்டு முதல் டேனிஷ் கோட்டை தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வு துறையின் கட்டுபாட்டுக்கு மாறி பராமரிக்கப்பட்டு வருகிறது.
கோட்டையின் உள்ளே பழங்கால பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகம் அமைந்துள்ளது. தரங்கம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிடைத்த பழமையான பொருட்கள், பண்டைய நாணயங்கள், போர்க்கருவிகள், முதுமக்கள் தாழி, கடவுள் சிலைகள், போர் வீரர்கள் பயன்படுத்திய உடைகள், உள்ளிட்ட பழமையான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.