சென்னை:தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா திட்டங்களில் அதிக அளவில் பொது மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சுற்றுப்பயணம், திருப்பதி ஒருநாள் சுற்றுலாவாகும். திருப்பதி சுற்றுலா செல்லும் பேருந்துனானது சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் இருந்து தினசரி காலை 4.30 மணிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்கின்றது.
ஒவ்வொரு பேருந்திலும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி பணியில் ஈடுபடுவார். வழிகாட்டிகள் திருப்பதி சுற்றுலா பயணிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுற்றுலா பயணத்திற்கான விளக்கங்களை அளிப்பார். சுற்றுலா பயணிகளுக்கு காலை உணவு திருத்தணியில் தமிழ்நாடு உணவகத்தில் வழங்கப்படுகின்றது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு, திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு அனுமதியாக வழங்கிய விரைவு தரிசன அனுமதி சீட்டின் மூலம் சுற்றுலா பயணிகள் தரிசனம் செய்த பின்னர், ஒவ்வொருவருக்கும் திருப்பதி லட்டு ஒன்று வழங்கப்படுகின்றன. மேலும் மதிய உணவுக்கு பின் திருச்சானுார் சென்று பத்மாவதி அம்மனை தரிசனம் செய்த பிறகு இரவு உணவு வழங்கப்பட்டு மீண்டும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சுற்றுலா பயணிகளை கொண்டு சேர்ப்பதுடன் திருப்பதி சுற்றுலா பயணம் முடிவு பெறுகின்றது.