சென்னை:சென்னை விமான நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களில் ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னை விமான நிலைய சுங்கத்துறை தனிப்படை அதிகாரிகள் சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை சோதனை நடத்தினர்.
இந்நிலையில், தங்கம் கடத்தலில் உடந்தையாக இருந்த கடை நடத்தி வரும் யூடிபர் சபீர் அலி, இலங்கையைச் சேர்ந்த ட்ரான்சிட் பயணி, சபீர் அலியின் பரிசுப் பொருட்கள் விற்பனை கடையில் பணியாளர்கள் உள்ள ஏழு பேர் ஆகிய 9 பேர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கிடையே, சென்னை விமான நிலைய சுங்கத்துறை சுய அதிகாரிகள் கொண்ட தனிப்படையினர் இது சம்பந்தமாக மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் இருவர், இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது. இதை அடுத்து சென்னை விமான நிலையத்தின் கமர்சியல் பிரிவில் இணை பொது மேலாளர் பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரியிடம் சுங்க அதிகாரிகள் குழுவினர் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
அதோடு அவருடைய அலுவலகம் மற்றும் அந்த விமான நிலைய உயர் அதிகாரியின் காஞ்சிபுரம் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது. மேலும் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் இருந்து விமான நிலையங்களில் கடைகள் வர்த்தக நிறுவனங்கள் தொடங்குவதற்கான உரிமங்கள் வழங்குவதற்கான அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனமான வித்வேதா பி.ஆர்.ஜி (Vidvedaa PRG) பொது மேலாளர் உட்பட இருவரிடமும் விசாரணையும் அவர்களுடைய அலுவலகங்களில் சோதனைகளும் நடந்தன.
இதில் அந்த தனியார் நிறுவனத்தின் பொது மேலாளர் பாஜக கட்சியை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சோதனைகளில் முக்கியமான ஆவணங்கள் பெருமளவு பணம் தங்கக் கட்டிகள் சிக்கியதா? என்பது குறித்து விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் இதுவரையில் அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.