கடலூர்:விருதுநகரில் வெம்பக்கோட்டை, திருவண்ணாமலையில் கீழ்நமண்டி, புதுக்கோட்டையில் பொற்பனைக்கோட்டை, தென்காசியில் திருமலாபுரம், கிருஷ்ணகிரியில் சென்னானூர், திருப்பூரில் கொங்கல் நகரம் போன்று கடலூரில் மருங்கூர் என்ற இடம் உள்பட இதுவரை எட்டு இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் மருங்கூரில் நடைபெறும் அகழாய்வில் ராஜராஜன் காலச் செம்புக் காசு, சுடுமண்ணால் ஆன வட்டச் சில்லுகள், பச்சை நிறக் கண்ணாடி மணி, ரெளலட்டட் வகைப் பானை ஓடுகள், செம்பினால் ஆன அஞ்சனக் கோல் ஆகிய தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (ஜன.29) 257 செ.மீ. ஆழத்தில், 22.97 கிராம் எடையும், 13 செ.மீ நீளமும், 2.8 மி.மீ தடிமனும் கொண்ட இரும்பினாலான கத்தி உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில், இரும்பினாலான அம்பு முனை, ஆணிகள் கிடைத்து வந்த நிலையில், தற்போது இந்த கத்தி கிடைத்துள்ளது. கத்தி கிடைத்துள்ளதன் மூலம், தொல் தமிழர் நாகரிகம் இரும்பின் பயன்பாடு அறிந்து, அதன் நுட்பங்களை கற்றுத் தேர்ந்திருந்தது புலப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுதனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.