சென்னை:2024 - 2025 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சுயசான்றிதழ் மூலமாகப் பொதுமக்கள் கட்டட அனுமதி பெறுவதற்குப் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜூன் 22ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் 2 ஆயிரத்து 500 சதுரஅடி வரையுள்ள மனையிடத்தில், 3 ஆயிரத்து 500 சதுர அடி கட்டடப் பரப்பளவிற்குள் தரைதளம் அல்லது முதல் தளம் கொண்ட 7 மீட்டர் உயரத்திற்குட்பட்டு குடியிருப்புக் கட்டடத்தைக் கட்டுவதற்கு விரும்பும் பொதுமக்கள், சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டட அனுமதியை ஆன்லைன் மூலம் பெறமுடியும்.
இது பொதுமக்கள் கட்டட அனுமதிக்காக அலுவலகங்களுக்குச் சென்றுவரும் நேரத்தை முழுமையாகத் தவிர்த்து. அதிகபட்ச வெளிப்படைத்தன்மையுடனும், நடைமுறையில் உள்ள கட்டட விதிகளை எளிமைப்படுத்தியும் மக்கள் மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சி என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக ஒற்றைச் சாளர முறையில் சுயசான்றிதழ் திட்டத்திற்கான மென்பொருள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேவையான உரிய கட்டணங்களைச் செலுத்தியபின், விரைவுத் துலங்கல் (QR) குறியீட்டுடன் கட்டட அனுமதி மற்றும் வரைபடங்களை உடனடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.