சென்னை:பாலஸ்தீன முகாம்கள் மீது குண்டு வீசி மக்களைக் கொன்று அழிக்கும் செயலைக் கண்டித்தும், இந்திய அரசு ராணுவ ஆயுதங்களை இஸ்ரேல் நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தக் கோரியும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பேரணி நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் பங்கேற்று பதாகைகளை ஏந்தியபடி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிச் சென்றனர். பேரணி இறுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “இந்தியா கூட்டணி சார்பில் மதச்சார்பற்ற ஆட்சி அமைய வாக்காளர் மத்தியில் ஒரு புதிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது.
பாஜக திட்டமிட்டு பல ஊடகங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் பயன்படுத்தி கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பை செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜகவின் கடைசி முயற்சியும் முறியடிக்கப்பட்டு, மாற்று ஆட்சி இந்தியாவில் உருவாகும். இந்த தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து இருக்கும் சூழ்நிலையில், உலகமே தலை குனியும் அளவுக்கு அமெரிக்காவின் ஆதரவோடு இஸ்ரேல் அரசு பாலஸ்தீனம் மீது இனப்படுகொலை செய்து வருகிறது.