தஞ்சாவூர்:அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அரசு நாடாளுமன்றக் குழு கூட்ட விசாரணைக்கு உத்தரவிட கோரியும், ஆண்டுக்கணக்கில் தொடரும் மணிப்பூர் கலவரம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க கோரியும், உணவு, தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலை உயர்வு மற்றும் பெருகிவரும் வேலையில்லா திண்டாட்டத்தை தடுக்க தவறியதைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பு தஞ்சை வடக்கு மாவட்ட சிபிஐ சார்பில் மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி தலைமையில் நடைபெற்ற முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மாநிலக்குழு உறுப்பினர் வை.சிவப்புண்ணியம், முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட மாநில, மாவட்ட, மாநகர், ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கொடி மற்றும் பதாகைகள் ஏந்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இரா.முத்தரசன், "மழை, வெள்ளம் காலங்களில் காவிரி டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஓலை குடிசை வீடுகள் இருப்பதால் அவை அதிகம் பாதிக்கப்படுகிறது. இதற்கு அவ்வப்போது ரூ.1000, 2000 என இழப்பீடு வழங்குவது நிரந்தர தீர்வாக அமையாது.
மாறாக, அவர்களுக்கு மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் கான்கிரீட் வீடுகளாக மாற்றி கட்டித்தர வேண்டும். அதுவே, நிரந்தர தீர்வாக அமையும். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும்.
மழை வெள்ளத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.5 லட்சம் என்பதனை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.17,500 என்ற இழப்பீட்டினை ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் என உயர்த்தி வழங்கிட வேண்டும்.