தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய பட்ஜெட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம்.. மயிலாடுதுறையில் போலீசாருக்கு காயம்! - CPI and CPM protest - CPI AND CPM PROTEST

CPI and CPM protest: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மாணவர் சங்க அமைப்பினர் ஒன்றிணைந்து கோயம்புத்தூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிபிஐ முத்தரசன்,  சிபிஎம்  ஜி.ராமகிருஷ்ணன்
சிபிஐ முத்தரசன், சிபிஎம் ஜி.ராமகிருஷ்ணன் போராட்டம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 4:33 PM IST

கோயம்புத்தூர்:2024-25ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜூலை 23ஆம் தேதி முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மத்திய பட்ஜெட்டில், பாஜக ஆட்சிக்கு ஆதரவளிக்கும் பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசத்துக்கு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனையடுத்து, பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் கூட இடம்பெறவில்லை என்று தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதனைக் கண்டிக்கும் விதமாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார்.

மத்தியில் 3வது முறையாக பொறுப்பேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில், மக்கள் விரோத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளதாகக் கூறி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தது.

போராட்டம்:அதன்படி, மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மாணவர் சங்க அமைப்பினர் ஒன்றிணைந்து இன்று கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சிபிஎம் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில், 200க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, “மத்திய பட்ஜெட்டை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இந்த நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்த தேசத்திற்கான அறிக்கை அல்ல. ஆண்டு பட்ஜெட் என்பது அனைத்து மாநிலங்களுடைய தேவைகளை அறிந்து பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்: அதற்கு மாறாக, பிரதமர் மோடி அரசு தங்களுடைய ஆட்சி மற்றும் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்காக பீகார் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதியை ஒதுக்கியுள்ளனர். தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. எந்த பட்ஜெட்டிலும் இப்படி ஒரு மாநிலம் புறக்கணிக்கப்பட்டது கிடையாது.

விவசாய விளைபொருளுக்கு விலை நிர்ணயச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதி குறித்து இந்த பட்ஜெட்டில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. அதானி, அம்பானி குடும்பங்கள் மேலும் வளர்வதற்கு இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு எதிரான பட்ஜெட் இது” இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ( சிபிஎம்) ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், “மத்திய அரசைப் பொறுத்தவரை ரூ.5 ஆயிரம் கோடி செலவு செய்து திருமணம் நடத்திய அம்பானி, அதானிக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு சலுகை அளிக்கக்கூடிய விதமாகத்தான் பிரதமர் மோடி அரசின் பட்ஜெட் இருக்கிறது. இளைஞர்கள் வேலைவாய்ப்பு, விவசாயம், பாதுகாப்பு, சிறு குறு தொழில்கள் பாதுகாப்பு, விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு கிடையாது.

உத்தரப்பிரதேசத்தில் 60 ஆயிரம் பேருக்கு 47 லட்சம் பேர் காவல்துறை வேலைக்காக பதிவு செய்துள்ளனர். இந்தச் சூழலில் வேலை வாய்ப்பு அதிகரிப்பதற்கு இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எதிராகவும், முதலாளிகளுக்கு ஆதரவாகவும் இருக்கக்கூடிய பட்ஜெட்டுக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டாட்சியில் பாஜக ஆளாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்பது முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி தாலுகா செயலாளர் பாபு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறையில் சிபிஎம், சிபிஐ, சிபிஎம்எல் இடது சாரி கட்சியினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட முயன்ற நிலையில், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில், காவலர் ராமகிருஷ்ணன் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், திலகர் என்பவரது சீருடை கிழிந்துள்ளது. மோதலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஐயப்பன் என்பவரது தலையில் காயம் ஏற்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 287 ஆக உயர்வு.. கேரளாவுக்கு விரையும் தேசிய தலைவர்கள் - Wayanad landslides

ABOUT THE AUTHOR

...view details