கரூர்:அரவக்குறிச்சி உரிமையியல் நீதிமன்றத்தில் துணை நாசராக பணியாற்றி வருபவர் லாலாப்பேட்டையை சேர்ந்த நடராஜன். இவர் பணியிட மாற்றம் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் அன்று அரவக்குறிச்சி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.
இவருக்கு மருத்துவ மற்றும் தற்செயல் விடுப்புகள் வழங்காமல் நிராகரிக்கப்பட்டதாகவும், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாத ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், மனம் உடைந்த நடராஜன், அரவக்குறிச்சி நீதிமன்ற வளாகத்தில் நேற்று( வியாழக்கிழமை) கைப்பட எழுதிய கடிதத்தை நீதிபதியிடம் வழங்கிவிட்டு, மயங்கி விழுந்துள்ளார். அங்குள்ள ஊழியர்கள் அவரை மீட்டு கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் ஜெயராம், இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளார். இந்நிகழ்வின் போது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட தலைவர் எம்.எஸ்.அன்பழகன், மாநில துணைத்தலைவர் செல்வராணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் ஜெயராம் கூறுகையில், “அரவக்குறிச்சி உரிமையியல் நீதிமன்றத்தில், மருத்துவ விடுமுறை அளிக்க மறுத்த நீதிபதியால், அரசு ஊழியர் நடராஜன் தற்கொலை முயற்சி செய்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.