திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் நத்தம், செந்துறைரோடு ஆர்.சி மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள கலைநகர் குடியிருப்பு பகுதியில், இன்று(திங்கட்கிழமை) காலை குடியிருப்பு வாசிகள் வழக்கமாக வேலைக்கு செல்வதற்காக சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது சாலையின் அருகே உள்ள முள் புதருக்குள் 20க்கும் மேற்பட்ட சணலால் சுற்றப்பட்ட நாட்டு வெடிகள் சிதறி கிடந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இதுகுறித்து நத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார், சிதறிக் கிடந்த நாட்டு வெடிகளை எடுத்துச் சென்றனர்.
குடியிருப்புவாசிகள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) வெடிகள் சிதறிக்கிடந்த பகுதிக்கு அருகாமையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மற்றும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகள் என்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று நத்தம் அருகே வெடி விபத்தில் உடல் சிதறி இருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பள்ளிக்கு அருகாமையில் இந்த வெடிகள் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து குடியிருப்பு வாசிகள் கூறியதாவது, "இந்த பகுதியில் உள்ள வழித்தடத்தை அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் மர்ம நபர்கள் யாரோ சணலால் சுற்றப்பட்ட நாட்டு வெடிகளை வீசி சென்றுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தின் பேரில் வெடியைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் சிலர் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபடுகின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள் என யாரும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்த முடியாக நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து கேட்டல் எங்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். இதற்கிடையில் சிலர் வெடிகளை வீசி சென்றுள்ளனர், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
நத்தம் போலீசார் அளித்த விளக்கம்:இது குறித்து ஈடிவி பாரத் செய்தியாளரிடம் நத்தம் காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி கூறியதாவது, கைப்பற்றப்பட்டவை வெடி குண்டுகள் அல்ல அது திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகள் ஆகும். இதனால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. இருப்பினும் அப்பகுதியில் நாட்டு வெடிகளை வீசி சென்ற மர்ம நபர்கள் யார்? ஏன் இது போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மகன் படித்த அரசுப் பள்ளிக்கு இலவசமாக கட்டடப் பணி செய்த தந்தை.. மதுரையில் நெகிழ்ச்சி!