தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகர்மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த ஹபிபுர் ரகுமானும், துணை தலைவராக ராசையாவும் இருந்து வருகின்றனர். இந்த நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் திமுக, அதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பாஜக, அமமுக, எஸ்டிபிஐ கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர்.
இந்த நிலையில், கடையநல்லூர் நகராட்சியில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நகர்மன்ற கூட்டத்தில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கான மன்ற பொருள் முன் வைக்கப்பட்டிருந்தன. கூட்டமானது சரியாக 10 மணி அளவில் தொடங்கிய நிலையில், கடையநல்லூர் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டு உறுப்பினர்களில், 4 கவுன்சிலர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதனால் கூட்டத்தில் போதிய கவுன்சிலர்களின் எண்ணிக்கை இல்லாத காரணத்தால் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற திமுக, பாஜக கவுன்சிலர்கள் கூட்டத்தின் போது மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு கவுன்சிலர்களை ஒருங்கிணைத்து நகர்மன்ற தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.