தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 48 வட்டங்களிலும், குப்பைகளை சேகரித்தல் மற்றும் தரம் பிரித்தல், சாலைகளில் தூய்மைப் பணி ஆகியவற்றுக்காக 450 தூய்மைப் பணியாளர்கள் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணி செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு தீபாவளி போனஸ் கேட்ட போது, தங்களது நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து 2 மாதங்கள் கூட ஆகாத நிலையில், எப்படி தீபாவளி போனஸ் வழங்க முடியும்? என மறுத்து விட்டதாகத் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இதே நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ள பிற மாநகராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கி விட்ட நிலையில், கும்பகோணம் மாநகராட்சியில் மட்டும் இதுவரை வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி, கடந்த சில நாட்களுக்கு முன்பு முதற்கட்டமாக காரனேஷன் மருத்துவமனை வளாகத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் (Credits- ETV Bharat Tamil Nadu) பின்னர், நேற்று (அக்.25) மதியம், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் திடீரென மாநகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தை தொடங்கினர். அதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: "கட்சிலலாம் இல்ல.. நம்ம ஒன்லி ரவுடிசம் தான்" - கல்குவாரி ஓனருக்கு மிரட்டல்.. ஆடியோ வெளியாகி பரபரப்பு!
அதனைத் தொடர்ந்து, தொழிற்சங்கத்தினர் இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பேசிய போது, "மாநகராட்சி ஆணையர் தற்போது இல்லை, திங்கட்கிழமை வந்து விடுவார். அப்போது இது தொடர்பாக பேசலாம்" எனக் கூறியுள்ளனர். அதைத் தொடர்ந்து, சுமார் அரை மணி நேரம் நீடித்த முற்றுகைப் போராட்டம் முடிவிற்கு வந்தது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்சங்க தலைவர் ஜீவபாரதி, "இந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 450 பேருக்கும் தீபாவளி போனஸாக 8.33 சதவீதம் மற்றும் தீபாவளி முன்பணமும் வழங்கிட வேண்டி, கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கட்கிழமை முற்றுகை போராட்டம் நடைபெறும் எனவும், அப்போது ஆணையரிடம் பேசி தீர்வு காணப்பட்டால் போராட்டம் முடிவிற்கு வரும், இல்லையெனில் முற்றுகை போராட்டம் தொடர்ந்து நடைபெறும்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்