ஏலக்காய் விலை கடும் வீழ்ச்சி தேனி:ஏலக்காய் ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய இடங்களுள் தேனி அடுத்த போடிநாயக்கனூர் பகுதியும் திகழ்கிறது. தமிழகம் மற்றும் கேரள எல்லையில் அமைந்துள்ள இப்பகுதியில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஏலக்காய் பயிரிடப்பட்டு, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
அப்பகுதிகளில் விளைவிக்கப்படும் ஏலக்காய், போடிநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டு, ஏலக்காய் வர்த்தக நிறுவனங்கள் மூலம் அதன் ரகம் பிரிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஏலக்காய் தொழில் மற்றும் விவசாயத்தால் பயனடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஆறு மாத காலமாக ஏலக்காய் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதாகவும், இதனால் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடுவதாகவும் ஏலக்காய் விவசாயிகள், வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஏற்றுமதிகள் சீராக இருந்த போதிலும், விலை தொடர்ந்து வருவதாவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:தேனி மாரத்தான் போட்டி குளறுபடி; ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக திமுக நிர்வாகி மீது வழக்குப் பதிவு!
அந்த வகையில், 6 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ முதல் ரக பெருவெட்டு ஏலக்காய் 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு கிலோ ஆயிரத்து 850 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே விற்கப்படும் அளவிற்கு, அதன் விலை சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆன்லைன் வர்த்தகம் மற்றும் நேரடி கொள்முதல் வர்த்தகங்கள் மூலம், ரகம் பிரிக்கப்படாத ஏலக்காய் இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஒரு கிலோ ஆயிரத்து 750 ரூபாய் முதல் ஆயிரத்து 800 வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு கிலோ ஆயிரத்து 500 முதல் ஆயிரத்து 550 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக தெரிய வருகிறது.
குறிப்பாக, ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ 3 ஆயிரம் ரூபாய் வரை விலை உச்சம் அடைந்திருந்ததாகவும், தற்போது அதன் விலை தொடர்ந்து சரிந்து, 2 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இதனால் பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாக ஏலக்காய் விவசாயிகள், வியாபாரிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க:மலை கிராமத்தில் தங்கி மக்களின் குறைகளைக் கேட்டு சோலார் மின்வசதி ஏற்படுத்திய தருமபுரி எம்எல்ஏ!