திருச்சி:திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய மதிமுகவிற்கு திருச்சி நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ போட்டியிட போவதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனையடுத்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள துரை வைகோ கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் சென்று ஆதரவு திரட்டி வருகின்றார். அந்த வகையில் இன்று திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டையில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு ஆதரவு திரட்டினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்," திருச்சி எம்பியாக நான் தேர்வு செய்யப்பட்டால் புதுக்கோட்டை உள்ளிட்ட விவசாயிகளின் 30 ஆண்டுகால கோரிக்கையான காவிரி குண்டாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொள்வேன்.
எனது தந்தை வைகோவைப் போல் என்னால் செயல்பட முடியாது. ஆனால் அவரை போல் பணியாற்ற முயற்சிகளை மேற்கொள்வேன், எனக்கு இது தான் முதல் தேர்தல். திமுகவின் தேர்தல் அறிக்கை நிச்சயமாக நிறைவேற்ற சாத்திய கூறுகள் உள்ளன.
நீட் விவகாரத்தை பொறுத்த வரையில் அதனை ஒழிக்க திமுக பல்வேறு முன்னெடுப்புக்களை எடுத்து வருகின்றனர். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அதே போல் சிஏஏ சட்டமும் ரத்து செய்யப்படும்.
14 ஆண்டுகளுக்கு பம்பரம் சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டபோது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பம்பரம் சின்னம் கிடைக்காத பட்சத்தில் பொது சின்னத்தில் போட்டியிடுவோம். மதுக்கடைகளை படிப்படியாக அகற்ற வேண்டும்.